காந்தி, ராஜிவ் சிலை அகற்ற முயற்சி கண்டித்து காங்கிரசார் போராட்டம்: விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் காந்தி, ராஜிவ் சிலைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரத்தில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 4 முனை சந்திப்பு முதல் மாதா கோயில் பேருந்து நிறுத்தம் வரை சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக காந்தி சிலை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி சிலை மற்றும் தேசப்பிதா காந்தி சிலையை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று அதிகாலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் சிலைகளை சுற்றிலும் பள்ளம் தோண்டப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட தலைவர் சீனுவாசகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காங்கிரசார் அங்கு திரண்டு வந்து சிலைகளை அகற்றும் பணியை தடுத்து நிறுத்தனர்.

தொடர்ந்து காந்தி சிலை அருகில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் டிஎஸ்பி திருமால் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசாருடன் டிஎஸ்பி பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து காங்கிரசார் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், காந்தி, ராஜிவ் சிலைகளை அகற்ற பள்ளம் தோண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் காங்கிரசார் மனு அளித்தனர். இந்த சம்பவத்தால் விழுப்புரத்தில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

× RELATED குடியிருப்பு பகுதியில் மருத்துவமனை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு