×

4 பைப் லைன் திட்டங்கள் இருந்தும் பலனில்லை, தினமும் குடிநீருக்கு தவிக்கும் 4 லட்சம் மக்கள்: கண்டுகொள்ளாத தூத்துக்குடி மாநகராட்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சிக்கு 4 பைப் லைன் திட்டங்கள் இருந்தும் 10 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் தினமும் குடிநீருக்காக மக்கள் தவித்து வருகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகள் மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து பகுதிகள் என மொத்தமுள்ள 60 வார்டுகளில் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தனி மனிதன் ஒருவருக்கு குறைந்தது 90 லிட்டர் குடிநீரும், ஒரு குடும்பத்திற்கு குறைந்தது 350 லிட்டர் குடிதண்ணீரும் வழங்க வேண்டும் என்பது மாநகராட்சி விதிமுறை. இதன்படி மாநகரில் குடிநீர் வழங்க வேண்டுமெனில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 50 மில்லியன் லிட்டர் குடிநீர்தேவை. மேலும் 60 வார்டுகளில் உள்ள மக்களுக்கும் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும்.

கடந்த 2017ம் ஆண்டு வரை தூத்துக்குடி மாநகராட்சிக்கு வல்லநாடு உறைகிணறுகளில் இருந்து 1, 2, 3 என மூன்று பைப்லைன் திட்டங்கள் மூலமாக மட்டுமே குடிநீர்எடுத்து வரப்பட்டது. இதில், முதலாவது குடிநீர்திட்டம் ஏற்கனவே முடங்கிப்போனதால் 2வது, 3வது பைப்லைன் திட்டத்தில் மட்டுமே குறைந்த அளவிற்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு மாநகர மக்களுக்கு ஓரளவிற்கு தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மாநகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ரூ.282 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக நான்காவது பைப் லைன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு இத்திட்டம், 2017 நவம்பர் 22ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. 4வது பைப்லைன் திட்டம் பயன்பாட்டிற்கு வந்தபிறகு மாநகரப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு என்பது பரவலாக இல்லாத நிலை ஏற்பட்டது.

ஆனால் இந்நிலை சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. அதுவும் தற்போது கோடையில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில் 8 அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. முதல் 3 பைப் லைன்கள் தூர்ந்து போன நிலையில், தற்போது 4 வது பைப்லைன் மூலம் மட்டுமே பழைய பைப்கள் ஒன்றிணைக்கப்பட்டு அவற்றின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது பல நாட்களாகியும் குடிநீர் கிடைக்காத மக்கள், தினமும் கண்ணீர் வடித்து பரிதவிப்பதுடன், குடிநீரை தனியார்களிடம் இருந்து விலை கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்காக லாரிகளில் கொண்டு செல்லப்படும் குடிதண்ணீரும் முறையாக வழங்கப்படாமல் விற்பனை செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குடிநீர் கிடைக்காத மக்கள் ஆங்காங்கே திடீர் போராட்டங்களை நடத்துவதும் வாடிக்கையாகி விட்டது. குடிநீர் தட்டுப்பாட்டால் தனியார்களின் தண்ணீர் விற்பனை பலமடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, முன்னாள் கவுன்சிலர் சந்திரபோஸ் கூறுகையில், தூத்துக்குடியில் 4வது பைப்லைன் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு தூத்துக்குடி மாநகராட்சியில் சில மாதங்கள் மட்டும் ஓரளவிற்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை நிலவி வந்தது.ஆனால் தற்போது மீண்டும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தாலும் கூட குறைந்த அளவே குடிநீர் கிடைக்கிறது. நான்காவது பைப் லைன் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால் தூத்துக்குடி மாநகரில் குடிநீர் தட்டுப்பாடே முற்றிலுமே இருக்காது என்று சொல்லப்பட்ட நிலை இன்று தலைகீழாக மாறிப்போனது, மாநகர மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது வருகிற உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என்ற நிலை உள்ளது, என்றார்.

30வது வட்ட அமமுக செயலாளர் காசிலிங்கம் கூறும்போது, 4வது பைப் லைன் திட்டத்திற்கு பின்னர் குடிநீர் பஞ்சமே இருக்காது என்று உறுதியளித்தனர். ஆனால் தற்போது முன்பை விட அதிகமாக குடிநீர் தட்டுப்பாடு மாநகராட்சியில் ஏற்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், விஐபிகளின் வீடுகள் என பல இடங்களில் ஒரே நேரத்தில் மின்சார மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதுவும் தட்டுப்பாட்டிற்கு ஒரு காரணம். அதிகாரிகள் அவ்வப்போது ஏதாவது ஒரு மூலையில் உள்ள சிறுசிறு வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சார மோட்டார்களை பறிமுதல் செய்கின்றனர். ஆனால் பாரபட்சமின்றி சட்டவிரோத மோட்டார் இணைப்புகளை துண்டித்தாலே குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை.
இவ்வாறு கூறினார்.

தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரித்தால் சரியாகிவிடும்

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தூத்துக்குடிக்கு வல்லநாடு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. ஆற்றில் நீர்வரத்து இல்லாத நிலையில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. தற்போது அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து பாபநாசம் அணை நீர்மட்டம் 33 அடியை எட்டியுள்ளது. ஓரிரு நாட்களில் ஆற்றில் நீர்வரத்து துவங்கும்போது முன்புபோல் மீண்டும் குடிநீர் விநியோகிக்கப்படும். மேலும் தற்போது வழங்கிவரும் நாட்களுக்கான இடைவெளி குறைந்து, அதிகளவிலும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு விடும். குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

Tags : Thoothukudi Corporation , 4 Pipeline Projects, Tuticorin Corporation
× RELATED தூத்துக்குடியில் சாலையில் சுற்றி திரிந்த 27 மாடுகள் பிடிபட்டன