×

கூடங்குளம் பகுதி மக்களுக்கு கடல்நீரை குடிநீராக்க அரசு ஒதுக்கிய 40 கோடி ரூபாய் என்னவானது?

ராதாபுரம்: தனது கிராமம் ஹைடெக் சிட்டியாக மாறும். ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து என மிகப்பெரிய விஞ்ஞான நகரமாக மாறும் என கனவுகளில் மிதந்திருந்த கூடங்குளம் கிராமம் தற்போது குடிநீருக்காக தவிக்கிறது. 1990ம் ஆண்டுகளின் இறுதியில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பூர்வாங்க பணிகள் துவக்கப்பட்ட போது கூடங்குளம் மக்கள்  அணுமின் நிலையத்தை ஆதரித்தே வந்தனர். கூடங்குளம் பகுதியில் புதிய தொழில் நிறுவனங்கள், வேலைவாய்ப்புகள், உள்ளூர் வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என்ற அணுமின் நிர்வாகத்தின் அறிவிப்புகள், இப்பகுதி மக்களின் கனவுகளை வளர்த்தன. வறண்ட பூமியாக இருந்தாலும் தனது முன்னோர்களின் வம்சாவழி விளைநிலங்கள் அரசின் சொற்ப விலைக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வழங்கப்பட்டன.

அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களில் இருந்த பெரிய புளியமரங்கள் வெட்டப்பட்டன. இதனால் தொடர்ந்து மழை மறைவு பிரேதேசமாக இருந்த கூடங்குளம் பகுதி, வறண்ட பாலைவனமாக மாறியது. அணு மின்நிலையம் துவக்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் கூடங்குளத்தில் பஸ் நிலையம் கூட கட்டப்படவில்லை. 2000க்கு  பிறகு முதல் உலை துவக்கப்பட்ட போது கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் இயக்குநராக  அகர்வால் நியமிக்கப்பட்டார். கூடங்குளம் அணுமின் நிலைய பகுதிக்கு பேச்சிப்பாறை அணை நீர்வரும். மாம்பழத்து அணை, பெருஞ்சாணி அணை ஆகியவற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. தனிக்கால் வாய் மூலம் வரும் தண்ணீரால் கூடங்குளம் பசுமையாகும் என்றெல்லாம் அணுமின் தரப்பில் அதிகாரிகளால் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு காலக்கட்டங்களை கடந்த பின்னும், இதுவரை கூடங்குளம் பகுதிகளுக்கு எந்த ஒரு ஆற்று நீரும் வந்து சேரவில்லை.

கடந்த 2012ம் ஆண்டு போராட்டத்தின்  போது கூடங்குளம் பகுதியை சார்ந்த 11 பஞ்சாயத்துகளின் வளர்ச்சிக்காக ரூ.500 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. அதில் ஒரு பகுதியாக ரூ.40 கோடி செலவில் ராதாபுரம் வள்ளியூர் யூனியன் பகுதிகளை சேர்ந்த 11 கிராம பஞ்சாயத்துகளில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் நிறைவேற்ற போவதாக அந்த கிராம பஞ்சாயத்து தலைவர்கள் அடங்கிய கூட்டத்தில் அப்போதைய மாவட்ட கலெக்டர் அறிவித்தார். ஏற்கனவே இந்த கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் மூலம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பிளாண்ட் மூலம் நாளொன்றுக்கு 76 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பெறப்படுகிறது என்றும், தற்போது ரூ.40 கோடி ஒதுக்கப்படும் பட்சத்தில் கூடங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள 11 கிராம பஞ்சாயத்தை சார்ந்த மக்களுக்கு கடல்நீரை குடிநீராக மாற்றி வழங்கப்படும். இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவ்வாறு ஒதுக்கப்பட்ட ரூ.40 கோடிக்கான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதனால் இன்று... குடிநீருக்காக கூடங்குளம் கிராம மக்கள், தனியார் தண்ணீர் ஆட்டோக்களை நம்பியே வாழ்கின்றனர். தினமும் குடிநீர், ஆட்டோக்கள் மூலம் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. தனியார், ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீரை பெற்றும் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். கூடங்குளம் அணுமின் நிலையமே தனியார்களிடம் இருந்து குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. அணுமின் நிலைய நிர்வாகம், கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி கூடங்குளம் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Koodankulam , Koodankulam, seawater drinking water, Rs 40 crore
× RELATED கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்...