×

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் சுற்றுலா தலமாகும் அரவட்லா மலை கிராமம்

வேலூர்: பேரணாம்பட்டு அரவட்லா மலை கிராமம் சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தின் சுற்றுலா வரைபடத்தில் வேலூர் மாவட்டம் மிகமுக்கியமான இடத்தை பிடித்துள்ளது. கல்வி, ஆன்மிகம், மருத்துவம், பொழுதுபோக்கு என சுற்றுலாவின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது வேலூர் மாவட்டம். இதனால் மாவட்டத்துக்கு சாதாரண நாட்களில் நாள்தோறும் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பேர் வரையும், விடுமுறை நாட்களில் 75 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரையும் வெளியூர், வெளிமாநில மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இவர்களுடன் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களுக்காக வந்து செல்பவர்களும் உள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழும் வேலூர் நகரிலும், வேலூர் கோட்டை வளாகத்திலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கிடையில் பேரணாம்பட்டு ஒன்றியம் ஆந்திர, கர்நாடக எல்லையை ஒட்டிய மலை கிராமமான அரவட்லா மலை கிராமத்தை சுற்றுலா தலமாக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. மலைகள் சூழ்ந்த அழகான இக்கிராமத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் வீரப்ப ஏரி, கடலப்ப ஏரி, சாம ஏரி என என்றும் வற்றாத மூன்று ஏரிகள் அமைந்துள்ளன. அதோடு 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சிவன் கோயிலும், அதனுடன் இணைந்த வற்றாத தாமரை குளமும் அமைந்துள்ளது.

தற்போது இக்குளத்தை சுற்றி ரூ3.23 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அதோடு மூன்று ஏரிகளிலும் உல்லாச படகு சவாரி செய்வதற்கான படகு இல்லம், ஏரிகளை ஒட்டி பூங்காக்கள், உயர்கோபுர பார்வை மாடம், மீன் காட்சியகம் என பல்வேறு பணிகள் சுற்றுலாத்துறை மூலமும், மாவட்ட பொது நிதி, ஒன்றிய பொது நிதி, அரசின் சிறப்பு நிதி மூலமும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் தொடங்கி நிறைவடையும்பட்சத்தில் மாவட்டத்தில் ஏலகிரிக்கு அடுத்து சுற்றுலா பயணிகளை கவரும் சிறந்த தலமாக அரவட்லா மலை கிராமம் விளங்கும்.அதோடு இக்கிராமம் மற்றும் அதை சார்ந்த 6 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பையும் உருவாக்கும். அதோடு இந்த கிராமத்துக்கு ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் எளிதில் வரும் வகையில் சாலை வசதிகளும் அமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இதனால் இப்பகுதியே வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும் என்கின்றனர் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்.

நிலங்களை வளைப்பதில் அதிகாரிகள் தீவிரம்

அரவட்லா மலை கிராமத்தை சுற்றுலா தலமாக்க அரசு முடிவு செய்ததும், ஏலகிரியை போன்றே இங்கும் நிலங்களை வளைத்து போடுவதில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். குறிப்பாக ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்த ஒரு அதிகாரி தனது மாமனார் பெயரில் 15 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை அடிமாட்டு விலையில் வாங்கியுள்ளாராம். இவரை பார்த்து அத்துறையை சேர்ந்த பிற அதிகாரிகளும் நிலங்களை வாங்கி போடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்களாம். இதனால் ஏலகிரியை போன்றே அரவட்லா கிராமத்திலும் மண்ணின் மைந்தர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags : Aravathala Hill Village ,Vellore district , Vellore, Tourism, Aravatla Hill Village
× RELATED திருப்பத்தூரில் விபரீதம் ஓடும்...