×

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழக கோயில்களில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடை

மதுரை: உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழக கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க இந்து அறநிலையத்துறை கமிஷனருக்கு அரசு ஆணையிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை விரைந்து அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. தமிழகத்தில் மதுரை மீனாட்சியம்மன், பழநி முருகன், திருப்பரங்குன்றம் முருகன், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி உள்ளிட்ட 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கோயில்களில் மேலாளர்கள், கணக்கர், அலுவலக உதவியாளர்கள் என பல ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் மாதந்தோறும் பலர் ஓய்வு பெற்று வருகின்றனர். 1989ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றவர்கள் பணிக்கொடை கிடைக்காமல் போராடி வருகின்றனர்.

பணிக்கொடை கேட்டு தொழிலாளர் நீதிமன்றம், ஐகோர்ட், உச்சநீதிமன்றம் வரை ஊழியர்கள் சென்றனர். இதில் உச்சநீதிமன்றம், ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டும், பல மாதமாக வழங்கப்படவில்லை. இதற்கிடையே தொழிலாளர் சட்டம் 1972ன்படி ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை முதுநிலை ஊழியர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருகிணைப்பாளர் ஹாஜிராவ் கூறும்போது, ‘‘தமிழகத்தில் கோயில் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கக்கூடாது என்ற நோக்கத்தில் இந்து அறநிலையத்துறை செயல்பட்டு வந்தது. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கொடை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதற்காக எங்கள் அமைப்பினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதன் பயனாக, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனரின் கருத்துருவை அரசு பரிசீலித்தது. தொடர்ந்து ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்கிட அந்தந்த கோயில் நிதியில் இருந்து விடுவிக்க இந்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திரரெட்டிக்கு கடந்த 3ம் தேதி அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நீதித்துறைக்கும், இந்து சமய அறநிலையத்துறை கமினருக்கும் கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் இந்த பணிக்கொடையை விரைவில் வழங்க வேண்டும்’’ என்றார்.

காலியிடங்களை நிரப்ப வேண்டும்

தமிழக கோயில்களில் 45 சதவீதம் பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் கோயில்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இருக்கும் பணியாளர்கள் கூடுதலாக பணிகள் செய்வதால் உடல்நிலை பாதிக்கப்படும் அவலமும் ஏற்படுகிறது. எனவே, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

நிதியை எப்படி விடுவிப்பது?

கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க கமிஷனர் ஆணை பிறப்பித்துள்ளார். இதில் எந்தெந்த கோயிலில் எப்படி நிதி விடுவிப்பது என்பதை பற்றிய விளக்க உரை கொடுக்கப்படவில்லை. எனவே, கோயில் இணை கமிஷனர்களுக்கு சுற்றறிக்கை மூலம் விளக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,temples ,Tamilnadu , Supreme Court, Tamil Nadu temples, workspace
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...