சேலத்தாம்பட்டி ஏரியில் தண்ணீர் ஊற்றுகள் மீது அடுக்குமாடி குடியிருப்பு

சேலம்: சேலத்தாம்பட்டியில் மக்களின் எதிர்ப்பை மீறி, ஊற்றெடுக்கும் தண்ணீர் மீது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. சேலம் ஒன்றியத்திற்குட்பட்ட சேலத்தாம்பட்டியில் 300 ஏக்கர் பரப்பளவில் பழமை வாய்ந்த பெரிய ஏரி உள்ளது. அந்த ஏரியின் ஒரு பகுதியில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், ரூ42.18 கோடி மதிப்பில், 496 புதிய குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. ஏரியிலேயே இந்த குடியிருப்பு வருவதால், இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இதனை கண்டுகொள்ளாத அதிகாரிகள், தற்போது 40 சதவீத கட்டுமான பணிகளை நிறைவு செய்துள்ளனர்.

இதனிடையே, கட்டுமானம் நடைபெற்று வரும் இடத்தில், ஊற்றெடுத்து தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது. அந்த தண்ணீரை வெளியேற்றினாலும், மீண்டும், மீண்டும் தண்ணீர் ஊற்றெடுத்து குளம்போல தேங்கி விடுகிறது. இதனையடுத்து, அதனை பொருட்படுத்தாமல் தேங்கிய தண்ணீரிலேயே கட்டுமான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘‘சென்னை மவுலிவாக்கத்தில் நடந்த கட்டிட விபத்தை தொடர்ந்து,  தமிழகத்தில் உள்ள நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில், நீதிமன்ற உத்தரவை மீறி, ஏரியில் குடியிருப்பு கட்ட ஆயத்த பணிகளை தொடங்கினர்.

இதற்காக லாரிகளில் மண்ணை கொண்டுவந்துகொட்டி, ஏரியை சமன்படுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி மற்றும் ஏரி தண்ணீரில் இறங்குவது வரை பல்வேறு போராட்டங்களை நடத்திவிட்டோம். ஆனால், எதிர்ப்புகளையும் மீறி கட்டப்பட்ட இக்கட்டிட பணிகள் தற்போது, 40 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. ஏற்கனவே இங்குள்ள 600க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள், மழை வரும் நேரங்களில் தண்ணீர் தேங்கி வீட்டிற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளது. எங்களுக்கு மாற்று இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், இந்த இடத்தில் மீண்டும் ஒரு குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், அங்கு குடியிருக்க வருபவர்களும் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனிடையே கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில், ஊற்றெடுத்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனை அகற்ற முடியாததால், அதிலேயே கட்டுமான பணிகள் ஜோராக நடந்து வருகிறது. இந்த அஜாக்கிரதையால், எதிர்காலத்தில் என்ன மாதியான விளைவுகளை ஏற்படுத்தும் என நினைத்தாலே அச்சம் ஏற்படுகிறது. இதற்கு உரிய தீர்வு காணப்படவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

More
>