×

டிக்.. டிக்... டிக்... (டோண்ட்) டாக்! வீட்டுப்பெண்களுக்கு வில்லங்கம் தரும் விபரீத செயலி...

பெரம்பலூர் மாவட்டம், சீராநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு. இவரது மனைவி அனிதா (24). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். பழனிவேலு சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். சீராநத்தம் கிராமத்தில் மகள், மகனோடு வாழ்ந்த  அனிதாவுக்கு, குழந்தைகளை விட குறும்புத்தனமான வீடியோக்களை வெளியிடும் டிக்-டாக் செயலி மீதே அதிக நாட்டம். விளைவு... தினந்தோறும் நடனம், டப்ஸ்மாஷ், காமெடி என தொடர்ந்து குறும் வீடியோக்களை டிக்-டாக்கில் பதிவேற்றிக்  கொண்டிருந்தார்.
பொதுவாக, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், டிக்-டாக் செயலிகளில் பெண்கள் ஐடியை குறி வைத்து செயல்படும் ஒரு கும்பல் இருக்கிறது. இவர்கள் வீடியோக்கள், படங்களை பார்த்து லைக் செய்வது, ‘வாவ் வெரி நைஸ்... எப்படி இப்படி  எல்லாம் செஞ்சு கலக்குறீங்க...’, ‘இந்த வீடியோவுல நீங்க செம ஸ்மார்ட்’, ‘ரொம்ப அருமையாக மேட்ச் ஆகுது... அப்படியே கேரக்டராகவே மாறிட்டீங்க...’ - இப்படி ஏகப்பட்ட கமெண்ட்ஸ் போட்டு வலை விரிப்பார்கள். பாராட்டுக்கு மயங்காத  ஆட்கள் இருக்கிறாங்களா என்ன?
அனிதாவுக்கும் இதுபோன்ற பாராட்டு மழை பொழியத்தொடங்கியது. இங்குதான் புயலும் தொடங்கியது. ஊரில் மழை பெய்தால் உடனே, ‘அடடா மழைடா.. அடை மழைடா...’ என்று துவங்கி பல் விளக்குதல், பாத்திரம் துலக்குதல் என  ஒவ்வொரு தருணங்களையும் வீடியோவில் பதிவேற்றம் செய்யத்தொடங்கினார். இதுவரை 200க்கும் மேற்பட்ட இவரது வீடியோக்கள் டிக்-டாக்கில் பரவ, அது டவுன்லோடு செய்து சிங்கப்பூரில் உள்ள கணவருக்கும் உறவினர்கள் அனுப்பி  வைத்தனர். உடனே மனைவியை கூப்பிட்டு, ‘பிள்ளைகளை கவனி.. இனி டிக்-டாக்கில் வீடியோ போடக்கூடாது’ என எச்சரித்திருக்கிறார்.

குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட கணவரின்  கண்டிப்பு, அனிதாவுக்கு நஞ்சாக தெரிந்தது. கோபம் தலைக்கேறிய நிலையில் கடந்த 10ம் தேதி நடக்கக்கூடாத அந்த நிகழ்வும் நடந்தது. ஆம்... அனிதா  ஒரு பாட்டிலில் விஷம் குடித்து  தற்கொலைக்கு முயன்றார். அதையும் டிக்-டாக்கில் வீடியோவாக பதிவு செய்தார். சிறிது நேரத்தில் அலறி மயங்க அக்கம்பக்கத்தினர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ம்ஹூம்... எந்த பயனுமில்லை. அனிதா இறந்தே விட்டார்.எந்த செயலி அனிதாவின் இயல்பான செயல்பாட்டை நிறுத்தி மகிழ்ச்சியை மாறி, மாறி தந்ததோ, அதே செயலியே அவரது உயிரையும் பறித்துக் கொண்டது. சென்னை குன்றத்தூர் அபிராமி கதை தெரிந்திருக்கும்தானே...? கள்ளத்தொடர்பால் தனது குழந்தைகளை கொன்றாரே? அவரேதான். துவக்கத்தில் காதல் கணவர், மகன், மகள் என இவரது வாழ்வும் மகிழ்ச்சியாகவே துவங்கியது. நாளாக நாளாக  சமூக வலைத்தளங்களில் கவனம் திரும்பியது. அன்றாட நிகழ்வுகளை பேஸ்புக் லைவில் போடுவது என துவங்கினார். அப்படியே டிக்-டாக் பக்கம் தாவினார். அப்போது அறிமுகமான பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்துடன் பேசி பழகினார்.  இருவரும் டிக்-டாக் டூயட் வீடியோவில் காதல் ரசங்களை கொட்டத்துவங்கினர். பல காதல் பாடல்கள் நள்ளிரவில் அரங்கேறின. பின்னர் இதுவே இவர்களுக்கு இடையே கள்ளக்காதலாகவும் மாறியது.
கள்ளக்காதலனுக்காக குழந்தைகளுக்கு பாலில் விஷம் கொடுத்தும், கழுத்தை நெரித்தும் கொன்று தமிழகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். கள்ளத்தொடர்பு மட்டுமல்ல... சமூக வலைத்தளங்களில் திருமணமான பெண்களுடன்  நைசாக பேசி, அவர்கள் மேல் அக்கறை மற்றும் அன்பு காட்டுவது போல நடிக்க இங்கு ஒரு கூட்டமே இருக்கிறது. இதனால் தற்கொலை செய்து கொள்வது, குழந்தைகள், கணவரை கொல்வது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரிக்கின்றன.

சரி… இவ்வளவு நேரம் டிக்-டாக்னு ஏதோ சொல்றீங்களே? அது என்ன என்கிறீர்களா? அதைப்பற்றி பார்ப்போம்.டிக்-டாக் என்பது ஆன்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் வகை மொபைல் போன்களில் பயன்படுத்தும் ஒரு வித செயலி (ஆப்). இதை வழக்கம்போல பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்ய வேண்டும். பின்னர் உங்கள் பெயர்,  மொபைல் எண், இமெயில் கொடுத்து உங்களுக்கான ஐடியை உருவாக்க வேண்டும். இதில் பல்வேறு மொழிகளில் பிரபலமான சினிமா ஹீரோக்கள் பேசிய பஞ்ச் வசனங்கள், பாடல்கள், காமெடி என பல ரகங்களில் ஆயிரக்கணக்கான  ஆடியோக்கள், வீடியோக்கள் உள்ளன. இவற்றின் ஆடியோவை ஓட வைத்து, நாம் வாய் மற்றும் உடலசைவுகளை கொடுத்தால் போதும். அடுத்த சில வினாடிகளில் நீங்கள் சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தல, தளபதி, வடிவேலு, சந்தானம்  ஆகலாம். ஏன் சில அரசியல் தலைவர்களின் பேச்சுக்கள் கூட இப்போது ஆடியோவாக டிக்-டாக்கில் வரத்துவங்கி விட்டன. டிக்-டாக்கில் பதிவிடுபவர்கள், அதை எத்தனை பேர் பார்வையிட்டு, லைக் போட்டுள்ளனர். கமெண்ட் செய்துள்ளனர் என்பதை ஆர்வமுடன் கவனிக்கின்றனர். லைக் குறையும்போது, அதை மேலும் மெருகேற்றும்விதமாக ஆபாசமாக உடை  அணிந்து, இரட்டை அர்த்த வசனங்களை பேசி வீடியோக்களை பதிவிடுகின்றனர். இதுவே பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக அமைகிறது.

 திருமணமான இளம்பெண்களை டிக்-டாக் அதிகம் ஈர்க்க காரணமென்ன என்பது குறித்து, மதுரை அரசு மருத்துவமனை மனநல மருத்துவப்பிரிவு துறைத்தலைவர் டாக்டர் குமணனிடம் கேட்டோம். அவர் கூறியதாவது:சிகரெட், மது போன்று இதுவும் ஒரு வகை போதை போன்றதுதான். ஆனால், ஆபத்தானது அல்ல. எளிதில் அவர்களை மீட்டெடுக்க முடியும். குடும்பத்தினரிடம் கிடைக்காத அன்பு, அதிக மன அழுத்தத்தால் சில இளம்பெண்கள், இளைஞர்கள்  இதுபோற செயலிகளுக்கு அடிமையாகி விடுகின்றனர். தற்போதைய நாகரீக உலகில் பணிச்சூழல் உட்பட பல்வேறு காரணங்களால் கணவன் - மனைவிக்கு இடையேயான நெருக்கம், மனம் திறந்து பேசுதல் குறைந்து விட்டது. இதனால்  தனிமைப்படுத்தப்படும் பெண்கள், தங்களது மகிழ்ச்சிக்கான வடிகாலை வெளியே தேடுகின்றனர். இதுவே பிரச்னையாகி விடுகிறது.இதற்கு அவர்களது குணாதிசயம், சுற்றுச்சூழல், படிப்பறிவு உள்ளிட்டவைகளும் காரணமாகி விடுகின்றன. டிக்-டாக் செய்யம்போது தங்களது தனித்திறன் வெளிப்படுகிறது. அதிகப்படியான மகிழ்ச்சியை பெறுகிறோம் என எண்ணி குடும்ப வாழ்வை  மறந்து இதற்கு முக்கியத்துவம் தருகின்றனர். தூக்கத்தை தொலைத்து இதிலேயே மூழ்கிக்கிடக்கும்போது கணவர், குழந்தைகளை பற்றி அவர்களது சிந்தனை செல்லாது.

 80களில் எப்படி வீடியோ கேமுக்கு நாம் அடிமையாகி கிடந்தோமோ, அதுபோல மாறுபட்ட காட்சியமைப்புகளில் வரும் செயலிகளுக்கு நாம் அடிமையாகி விடுகிறோம். இந்தப் பிரச்னையை உளவியல், மனநல மருத்துவம் மூலமாகவோ, அல்லது  ‘நடத்தை மாற்று சிகிச்சை’ என்பதன்மூலம் இதை சரி செய்யலாம். அதாவது, அவர்களை சினிமா, சுற்றுலாவுக்கு அழைத்து சென்று, கூடுதல் நேரம் செலவிடலாம். பிடித்தமானதை வாங்கித்தரலாம். மாறாக, கட்டுப்படுத்த வேண்டுமென நாம் கட்டாயப்படுத்தும்போது, வெறுப்புணர்ச்சியே அவர்களுக்கு நம் மேல்  அதிகம் வரும். படிப்படியாக இதை மாற்றிக் கொண்டு வந்து விட முடியும். பெரும்பாலான நேரங்களை, மொபைலில் செலவிடுவதை குறைத்து, குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியாக பேசினாலே இந்த பிரச்னைகளை எளிதில் தீர்க்கலாம்.இவ்வாறு கூறுகிறார்.

‘‘தற்போதைய நாகரீக உலகில் பணிச்சூழல் உட்பட பல்வேறு காரணங்களால் கணவன் - மனைவிக்கு இடையேயான நெருக்கம், மனம் திறந்து பேசுதல் குறைந்து விட்டது. இதனால் தனிமைப்படுத்தப்படும் பெண்கள், தங்களது மகிழ்ச்சிக்கான  வடிகாலை வெளியே தேடுகின்றனர். இதுவே பிரச்னையாகி விடுகிறது...’’நீதிமன்ற நிபந்தனை மீறப்படுகிறதா?இளைஞர்களை தவறாக வழிநடத்தும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டுமென ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்வதை தடை செய்ய  நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சகத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. மேலும் டிக்-டாக் வீடியோக்களை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர் நடந்த விசாரணையில் டிக்-டாக் நிறுவனம் சார்பில், ‘‘பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்ளிட்டோரின் ஆபாச வீடியோக்கள் மற்றும் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால், அவற்றை செயலியிலேயே  அகற்றும் வகையில் உள்ளது. டிக்-டாக் செயலி தொடர்பாக இந்தியாவில் இருந்து வரும் புகார்களை விசாரிக்க தனியாக நோடல் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்’’ என உறுதிமொழி அளிக்கப்பட்டது.

இந்த உறுதிமொழியை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டிக்-டாக்  செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி அனுமதித்தனர். அதேநேரம் நிறுவனத்தின் உறுதிமொழியை மீறினால், ஐகோர்ட்டே தாமாக முன்வந்து நீதிமன்ற  அவமதிப்பு வழக்கை தாக்கல் ெசய்யும். அதை டிக்-டாக் நிறுவனம் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து,  விசாரணையை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.ஆனாலும், தொடர்ந்து ஆபாச வீடியோக்கள், இரட்டை அர்த்த வசனங்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. இனியாவது, இதுபோன்ற செயலிகளை மத்திய, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டுமென கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

75 மொழிகளில் பார்க்கலாம்
டிக்-டாக் விபரீதம் அறிந்து இந்தோனேஷியா உள்ளிட்ட ஒரு சில நாடுகள் இதனை தடை செய்திருக்கின்றன. ஆனால், உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில், 75 மொழிகளில் டிக்-டாக்கை பார்வையிடும் வசதி இருக்கிறது.  இந்தியாவில் சுமார் 18 கோடி பேர் இதை பார்வையிடுகி–்ன்றனர். உலகம் முழுவதும் 100 கோடி பேர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

குறுகிய காலத்தில் ‘கிடுகிடு வளர்ச்சி’
சீனாவில் உள்ள பைட் டேன்ஸ் (Byte Dance) நிறுவனம் கடந்த 2016, செப்டம்பரில் ‘டோயின்’ என்ற ஜாலியான செயலியை உருவாக்கியது. இதில் நடன அசைவுகள் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டன. பின்னர் இதையே கொஞ்சம் மாடர்னாக  டிக்-டாக் என பெயர் மாற்றி 2017ல் வெளிமார்க்கெட்டில் விட்டனர். வெளியிட்ட ஓராண்டிலேயே அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் டிக்-டாக் பரவலாக பலரால் பதிவிறக்கம் செய்யப்பட்டது. அப்போது பரவலாக இருந்த மியூசிக்கலி செயலியுடன்  ஒன்றிணைந்து, உலகம் முழுவதும் தங்களது மார்க்கெட்டை பைட் டேன்ஸ் நிறுவனம் பரப்பியது. 2018ல் அமெரிக்காவில் 8 கோடி பேரும், உலகம் முழுவதும் 80 கோடி பேர் இதை பயன்படுத்த துவங்கி விட்டனர்.

உறவினர் சுட்டார்.... உயிரிழந்தார்
மகாராஷ்டிரா மாநிலம், ஷீரடியில் ஒரு குடும்பத்தை சேர்ந்த உறவினர்களான பிரதீக் வாடேகர் (17), நிதின் வாடேகர் (27), சன்னி பவார் (20) ஆகியோர் கடந்த 12ம் தேதி ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். அப்போது நாட்டுத்துப்பாக்கியை வைத்து  டிக்-டாக் செய்து கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக டிரிக்கரை அழுத்தியபோது, தோட்டா வெளியேறி பிரதீக் வாடேகர் மீது பாய்ந்ததில் அவர் உயிரிழந்தனர். இப்போது சுட்டவர்கள், கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

காவல் நிலையத்தில் செய்து கம்பி எண்ணிய இளைஞர்கள்
எதுக்கும் ஒரு வரைமுறை இருக்கு... ஆனால், டிக்-டாக்ல அது கிடையாது. விருதுநகர், மதுரை மாவட்ட காவல்நிலையங்களில் சில இளைஞர்கள் ஜாலியாக டிக்-டாக் செய்ய, அதுவே அவர்களை ‘கம்பி எண்ண’ வைத்த சம்பவங்களும் நடந்தன.  அதாவது, ‘‘இது மாதிரி இடங்கள்ல எல்லாம் வலது காலை வச்சு வரக்கூடாது. லெப்ட் காலை வச்சுத்தான் வரணும்’’ என்று செய்தவர்களை, காவல்துறை லெப்ட் அண்ட் ரைட் வாங்கியது ஒரு பெருங்கூத்து.  



Tags : householder , Tick .. Tick ... Tick ...,housekeepers, Willingham, Advertisement ...
× RELATED முன்விரோத தகராறில் எதிர்...