×

மன்மோகன் சிங்கின் எம்பி பதவி முடிந்தது:28 ஆண்டு பயணம் நிறைவு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை எம்பி பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிந்தது.  காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங், கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர். இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. இவர் கடந்த 1991ம் ஆண்டு முதல் முறையாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இறுதியாக, கடந்த 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அவரது 6 ஆண்டு பதவிக் காலம் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. அவர் ஓய்வு பெற்ற நிலையில், அசாமில் காங்கிரசுக்கு போதுமான எம்எல்ஏ.க்கள் இல்லாததால், அவரை அங்கிருந்து மீண்டும் எம்பி.யாக தேர்வு செய்ய முடியாத நிலை உள்ளது. அதாவது, அசாமில் 25 எம்எல்ஏ.க்களே காங்கிரசுக்கு உள்ளனர். ஆனால், மன்மோகனை எம்பி.யாக தேர்வு செய்ய 43 எம்எல்ஏ.க்கள் தேவை. போதுமான பலம் இல்லாததால் அவர் மீண்டும் அசாமில் இருந்து எம்பி.யாக தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை. இதனால், 28 ஆண்டுகளாக எம்பி.யாக பதவி வகித்த அவரது பயணம் நிறைவு பெற்றுள்ளது.

 அதே நேரத்தில் மாநிலங்களவையில் 9 இடங்கள் காலியாக உள்ளன. இதில் ஒடிசாவில் 4 இடங்களும், தமிழகத்தில் ஒரு இடமும், பீகாரில் 2 இடங்களும், குஜராத்தில் 2ம் உள்ளன. ஆனால், காங்கிரசுக்கு குஜராத்தில் மட்டுமே எம்பி.யை தேர்வு செய்யும் அளவுக்கு எம்எல்ஏ.க்கள் உள்ளனர். இதனால், இங்கிருந்து மன்மோகன் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.  அதேபோல் கர்நாடகா, சட்டீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப்பில் காங்கிரசுக்கு போதுமான எம்எல்ஏ.க்கள் உள்ளதால் அங்கிருந்து மன்மோகனை எம்பி.யாக தேர்வு செய்யலாம் என்றால், அங்கு எம்பி பதவி எதுவும் காலியாக இல்லை. எனவே, ஓய்வு பெற்று விட்ட மன்மோகன் சிங் வரும் 17ம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள முடியாது.

Tags : Manmohan Singh ,journey ,MB , Manmohan Singh's,MB post, 28 year,journey completed
× RELATED அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின்...