×

1998ல் நடத்தியது போல கோவையில் குண்டு வெடிப்பை மீண்டும் அரங்கேற்ற திட்டம்: என்ஐஏ விசாரணையில் திடுக் தகவல்

கோவை: கோவையில் 1998ல் நடத்தியதுபோல் மீண்டும் தொடர் குண்டுவெடிப்புக்கு சதி திட்டம் தீட்டிய திடுக்கிடும் தகவல் பிடிபட்டவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் குண்டு வெடித்து 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தமிழகத்தில் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக கொச்சியை சேர்ந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 12ம் தேதி கோவையில் முகமது அசாருதீன்(32), சதாம் உசேன்(26), அக்ரம் ஜிந்தா(26), அபுபக்கர் (29), இதயத்துல்லா(38), இப்ராஹீம் (28) ஆகியோரது வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தி மொபைல் போன்கள், 29 சிம்கார்டு, 10 பென்டிரைவ், 300 ஏர் கன் புல்லட்டுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.பின்னர் ரேஸ்கோர்சில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். 6 பேரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இளைஞர்களை சேர்க்க மூளைச்சலவை செய்து, தமிழகம் மற்றும் கேரளாவில் சில இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் 6 பேருக்கும் முகமது அசாருதீன் தலைவராக செயல்பட்டதும் தெரியவந்தது. இவர்களில், அசாருதீன் தனது முகநூலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். இலங்கை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாகவும், மனித வெடிகுண்டாகவும் செயல்பட்ட ஜஹ்ரான் ஹாஷிம் என்பவருடன் பேஸ்புக் நண்பராக இருந்துள்ளார்.இதையடுத்து, முகமது அசாருதீனை கைது செய்து, கொச்சி  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த 6 பேர் அளித்த தகவலின்பேரில், கோவையில் உக்கடம் வின்சென்ட் சாலையை சேர்ந்த முகமதுஉசேன், ஷாஜகான், ஷேக் ஷபியுல்லா ஆகிய 3 பேரை கோவை போலீசார் பிடித்து விசாரித்தனர். இவர்கள், ஐஎஸ்ஐஎஸ்  அமைப்பின் கொள்கைகளையும், தீவிரவாத செயல்களையும் இளைஞர்களிடம் சமூகவலைதளங்கள்  மூலமாக பரப்பி வந்ததும், கடந்த 1998 பிப்ரவரி 14ம்தேதி பா.ஜ மூத்த தலைவர் அத்வானி தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்தபோது 9 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதுபோன்று, மீண்டும் ஒரு சதிச்செயலை கோவையில் அரங்கேற்ற திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

இவர்கள் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக்’ மற்றும் சிரியா அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள் என்பது ெதரிய வரவே 3 பேரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்களை நேற்று காலை ரேஸ்கோர்ஸ் நீதிபதி குடியிருப்பில் உள்ள மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் முன் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 29ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.முன்னதாக, அசாருதீன் உள்ளிட்ட 6 பேர் கொடுத்த தகவலின்பேரில், சதாம், ஜனோபர் அலி, பெரோஷ்கான், முபின், உமர் பாரூக் ஆகிய 5 வாலிபர்களை என்ஐஏ அதிகாரிகள் பிடித்தனர். அவர்களில் சதாம் விடுவிக்கப்பட்டார். மற்ற 4 பேரில் ஜனோபர் அலி, பெரோஷ்கான், முபின் ஆகிய 3 பேரை கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்திலும், உமர் பாரூக்கை கோவையில் உள்ள என்ஐஏ அலுவலகத்திலும் வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 11 பேர் என்ஐஏ அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்கள் மீதும் UPA (சட்டவிரோத செயல்கள்  தடுப்புச்சட்டம்) பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வீடியோ காட்சிகளை பலருக்கும் பகிர்ந்து, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின்  கொள்கைகளை தமிழில் மொழியாக்கம் செய்து பரப்பி வருவதும், கோவை மாநகரில் ஐஎஸ்ஐஎஸ்  அமைப்பிற்கு ஆதரவான தங்கள் பலத்தை காட்டவும், மக்கள் அதிகம் கூடும்  இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே, தாக்குதலை முன்கூட்டியே தடுக்கவேண்டும் என்ற முனைப்பில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர் ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர்.


தகவல் தொடர்பு எப்படி?என்ஐஏ பிடியில் சிக்கியுள்ள கோவை குனியமுத்தூரை சேர்ந்த முகமது அசாருதீன் (32), “khilafah  gfx” என்ற தனது முகநூல் பக்கத்தின்  வழியாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத கருத்துக்களை  பரப்பியுள்ளார். இலங்கை  குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக  இருந்த ஜஹ்ரான் ஹாஷிமுடன் முகநூல் நண்பராக இருந்துள்ளார். அவர்  வெளியிட்ட தீவிரவாத காணொளிகளை சமூக  வலைதளத்தில் பரப்பியுள்ளார்.

சிமி இயக்கத்துடன் தொடர்புகோவையில் பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் ேஷக் இதயத்துல்லா என்பவர் தடை செய்யப்பட்ட அமைப்பான இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துடன் (சிமி) தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இதுகுறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், `கோவை தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஷேக் இதயத்துல்லாவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன்மூலம் அவருக்கு சிமி இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளோம்’ என்று கூறப்பட்டுள்ளது.


தென்னிந்தியாவில் 150 பேர்

இஸ்லாமிக்  ஸ்டேட் என்ற ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு தென்னிந்தியாவில் மட்டும் 150  ஆதரவாளர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்திய  உளவு அமைப்பினர்  கண்காணிப்பில் இருக்கும் ஐஎஸ் ஆதரவாளர்களிடையே ஒரு  குறிப்பிட்ட பாணி  இருப்பதாக தெரியவில்லை. இவர்கள் தென்னிந்தியாவைச்  சேர்ந்தவர்கள் மற்றும்  பலர் பொறியியல் பட்டதாரிகள் ஆவர். கண்காணிப்பில் இருக்கும் 150  பேரில்  தெலங்கானாவை சேர்ந்தவர்கள் 18 பேர் என்பது  குறிப்பிடத்தக்கது.  தமிழகத்திலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையுள்ளவர்கள்  இருப்பதாக தெரிகிறது.



Tags : bomb blast , Plan ,restart ,bombing,Goa , 1998,solid information from NIA investigation
× RELATED கோவை குண்டு வெடிப்பு தினம் குறித்து...