பெரியகுளம் அருகே கலவரம் கல்வீச்சில் எஸ்பி உட்பட 15 போலீசார் படுகாயம்: 200 பேர் மீது வழக்கு; போலீஸ் குவிப்பு

பெரியகுளம்:  பெரியகுளம் அருகே இருபிரிவினரிடையே மோதலையடுத்து மறியல் போராட்டத்தின்போது நடந்த கல்வீச்சில் எஸ்பி பாஸ்கரன் உள்பட 15 போலீசார் படுகாயமடைந்தனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் முரளி. எலக்ட்ரிகல் கடை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் இவரது கடை அருகே சருத்துப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் ரஞ்சித், டூவீலரில் வேகமாக சென்றார். இதை முரளி கண்டித்தார். ஆத்திரமடைந்த ரஞ்சித் மற்றும் உறவினர்கள், முரளி மற்றும் அவரது மனைவி, சகோதரியை தாக்கினர். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி லட்சுமிபுரத்தில் முரளியின் உறவினர்கள் மறியல் செய்தனர். அப்போது பெரியகுளத்தை சேர்ந்த அஜித்குமார், சுரேந்தர் மறியலை செல்போனில் படம் எடுத்தனர். அவர்களை லட்சுமிபுரத்தை சேர்ந்தவர்கள் தாக்கினர். இதனைக் கண்டித்து பெரியகுளம் தென்கரையில் மறியல் நடைபெற்றது.ரஞ்சித்தின் அக்கா கணவர் சிரஞ்சீவி தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். அவரை பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் லட்சுமிபுரத்தை சேர்ந்த சிலர் தாக்கினர்.

இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் கிராமத்தில் உள்ள குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு சருத்துப்பட்டி பாறை நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனர். தேனி எஸ்பி பாஸ்கரன் தலைமையில் போலீசார் வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். திடீரென போலீசார் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதில் எஸ்பி பாஸ்கரன் தலை, கண் பகுதியில் காயம் ஏற்பட்டது. மேலும் கூடுதல் எஸ்பி சுருளிராஜன், பெரியகுளம் டிஎஸ்பி ஆறுமுகம் உட்பட 15 போலீசார் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் தேனி மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் சிலர் சருத்துப்பட்டியில் உள்ள சில வீடுகளையும், அப்பகுதியில் வந்த அரசு பஸ்சையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். அங்கு தென்மண்டல ஐ.ஜி (பொறுப்பு) டேவிட்சன் தேவாசிர்வாதம், திண்டுக்கல் சரக டிஐஜி நிர்மல்ஜோசிகுமார் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரியகுளம் பகுதியில் பதற்றம் நிலவுவதால் 300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.Tags : policemen ,riots ,Periyakulam Police , 15 policemen,injured, riots , Periyakulam,focus of the police
× RELATED பாதை மாறும் இளைஞர்கள்...கல்லா கட்டும்...