×

மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய அமைச்சரிடம் எடப்பாடி, குமாரசாமி முறையீடு

* டெல்லியில் அடுத்தடுத்து நடந்த சந்திப்பால் பரபரப்பு
*  ‘கட்டியே தீருவோம்’ என்று கர்நாடக முதல்வர் பிடிவாதம்

புதுடெல்லி: மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கும்படி கர்நாடகா முதல்வர் குமாரசாமியும், அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லியில் மத்திய நீர்பாசனத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அடுத்தடுத்து சந்தித்து முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்’ என குமாரசாமி தெரிவித்தார். காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் தடுப்பணை கட்ட, கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த முறை இம்மாநில முதல்வராக  இருந்த சித்தராமையா,  இத்திட்டத்துக்கான வரைவு திட்டத்தை தயாரிக்க ரூ.50 கோடி  ஒதுக்கினார். இதைத் தொடர்ந்து, அணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் வேகம் எடுத்தன.  கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்று, மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவு திட்டம் தயாரிப்பதற்கு மத்திய  சுற்றுச்சூழல் துறையும் அனுமதி  வழங்கியது. அதன்படி, வரைவு திட்டம் தயாரித்து சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கர்நாடகா சமர்ப்பித்துள்ளது. ஆனால், அணை கட்டுவதற்கானஅனுமதியை மட்டும் மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை.  கர்நாடகாவின் இந்த அணை திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசிடமும் முறையிட்டுள்ளது. அதோடு, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த பிரச்னையால் இருமாநிலங்களுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நடந்து கொண்டிருந்த நிலையில்தான், மக்களவை தேர்தல் குறுக்கிட்டது. அதனால், இப்பிரச்னை கிடப்பில் கிடந்தது. தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் பாஜ மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிலையில், மேகதாது அணை விவகாரத்தை கர்நாடக அரசு மீண்டும் கிளப்ப தொடங்கி உள்ளது.

 டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் 5வது நிதி ஆயோக் கூட்டம்  நேற்று நடந்தது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடகா முதல்வர் குமாரசாமி உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய குமாரசாமி, கர்நாடகா அரசின் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கும்படி  பிரதமரிடம் வலியுறுத்தினார். கூட்டத்துக்குப் பிறகு, மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அவருடைய அலுவலகத்தில் குமாரசாமி சந்தித்தார். அப்போது,  ‘மேகதாது தடுப்பணை  திட்டத்துக்கு மத்திய  சுற்றுச்சூழல் துறை அளித்த அனுமதியின்படி வரைவு திட்டம்  தயாரிக்கப்பட்டு உள்ளது. இது, குடிநீருக்கான திட்டம் மட்டுமே. அதனால், இத்திட்டத்துக்கு தமிழகம்  உள்ளிட்ட மாநிலங்களின் அனுமதி தேவையில்லை. எனவே, அணை கட்டும் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்’ என்று ஷெகாவத்திடம் குமாரசாமி  வலியுறுத்தினார். மேலும், இந்த திட்டம் தொடர்பான விரிவான ஆய்வறிக்கை, வரைவு திட்டம் உள்ளிட்ட  ஆவணங்களையும் அவரிடம் வழங்கினார். இந்த சந்திப்புக்குப் பிறகு குமாரசாமி அளித்த பேட்டியில், ‘‘மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கும்படி ஷெகாவத்திடம் வலியுறுத்தி உள்ளேன். கர்நாடகாவில் அணை கட்ட, மற்ற மாநிலங்களின் அனுமதி அவசியமில்லை. எனவே, மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம்,’’ என்றார்.

குமாரசாமி சந்தித்த சிறிது நேரத்துக்குள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஷெகாவத்தின் அலுவலகத்துக்கு வந்தார். அவரை சந்தித்து, தமிழக நீர்பாசன திட்டங்கள் குறித்து பேசினார். மேலும், ‘மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது. அப்படி அனுமதி அளித்தால், தமிழகத்துக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும்’ என அவரிடம் வலியுறுத்தினார். அதோடு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது, காவிரியில் இருந்து உச்ச நீதிமன்ற   உத்தரவின்படி தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்து வருவது மற்றும் இவை தொடர்பான   வழக்கு விவரங்களையும் அவரிடம் விளக்கினார். அது தொடர்பான மனுக்களையும் அளித்தார். இவ்வாறு, மேகதாது அணை பிரச்னை தொடர்பாக  தமிழக, கர்நாடகா முதல்வர்கள், மத்திய நீர்பாசனத் துறை அமைச்சர் ஷெகாவத்தை அடுத்தடுத்து சந்தித்து முறையிட்டதால், டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

* காவிரியின் குறுக்கே மேகதாது என்ற  இடத்தில் தடுப்பணை கட்ட, கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
* கடந்த முறை  இம்மாநில முதல்வராக இருந்த சித்தராமையா, இத்திட்டத்துக்கான வரைவு திட்டம்  தயாரிக்க ₹50 கோடி  ஒதுக்கினார்.
* அணை கட்டுவதற்கான வரைவு திட்டம்  தயாரிப்பதற்கு மத்திய  சுற்றுச்சூழல் துறையும் அனுமதி  வழங்கியது.
* ஆனால், அணை கட்டுவதற்கான அனுமதியை மட்டும் மத்திய அரசு  இன்னும் வழங்கவில்லை.

Tags : Union Minister ,Megadadu Dam , Kumadaswamy,appealed ,Union Minister,issue , Meghadad dam
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...