மின்னோட்டங்களுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுவதற்கு பதில் தரைவழி மின்பாதை அமைக்கப்படுமா? : பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நெல்லை : மின்சாரம், மரங்கள் இரண்டுமே அத்தியாவசிய தேவையாக உள்ளன. ஆனால் சாலைகளில் எடுத்துச் செல்லப்படும் மின்பாதைகளுக்கு மரங்களின் வளர்ச்சி பெறும் இடையூறாக உள்ளது. இதனால் மின்கம்பிகளை தாண்டி படர்ந்து வளர்கின்றன. அதே நேரத்தில் மரங்களின் தேவை இன்றைய நிலையில் மிகவும் அத்தியாவசியமாக மாறிவிட்டது. மாநகர பகுதிகளில் பிரதான அகல சாலைகள் உள்ள இடங்களில் மரங்கள் பாதிப்பது அரிதாகிறது. வீட்டுக்கு ஒரு மரம் வளருங்கள் என அரசு கூறினாலும் பலர் இதை பின்பற்றுவதில்லை. சிலர் பின்பற்றி வீட்டிலும் வீட்டின் முன் உள்ள சாலையோரங்களிலும் மரங்களை வளர்த்தால் அவை குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் வளரும் போது மின் பாதைகள் செல்வதற்கு இடையூறாக மாறுகிறது. இது காற்று, மழைக்காலங்களில் தேவையற்ற விபரீதங்களை ஏற்படுத்துகிறது. சற்று கனமான மரக்கிளைகள் அதிவேக காற்றில் முறிந்து விழும் போது மின்கம்பிகளும் அறுந்து விழுகின்றன.

மேலும் சில பகுதிகளில் மின்கம்பங்களையும் சாய்க்கின்றன. மின் ஓட்டத்துடன் அறுந்து விழும் மின்கம்பிகள் தேவையற்ற விபத்துக்களை ஏற்படுத்த வழி வகுக்கின்றன. இதன் காரணமாக மின்வாரியத்தினர் மாதத்திற்கு ஒரு முறை ஜங்கிள் கிளியரன்ஸ் என்ற பெயரில் மின்கம்பிகளின் பாதையை ஒட்டி வளர்ந்து நிற்கும் மரக்கிளைகளை வெட்டித்தள்ளுகின்றனர். இதனால் பல மரங்களின் பெரும்பாலான பகுதிகள் மொட்டையடித்த நிலைக்கு மாறுகிறது. அவ்வாறு வெட்டப்பட்டாலும் அவை மீண்டும் சில மாதங்களில் மேலும் வேகமாக வளர்ந்துவிடுகின்றன. இதில் அனைத்துமே பச்சை மரங்கள் ஆகும்.மின்சாரமும் தேவை, விபத்தும் நடக்கக்கூடாது. அதே நேரத்தில் மரங்களை அகற்றுவதை தவிர்க்க மாற்று வழிகளை மின்வாரியம் பின்பற்றவேண்டும். குறிப்பாக பெரும்பாலான மின்பாதைகளை தரைவழியில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

× RELATED ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை...