×

பழநியில் விடுதிகளாகி வரும் வீடுகள் : அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பழநி : பழநியில் வீடுகளை விடுதிகளாக மாற்றுவது அதிகரிப்பதால், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, நவராத்திரி என வருடம் முழுவதும் திருவிழா இருந்து கொண்டே இருக்கும். இதனால் பழநி நகருக்கு அநேக நாட்களும் பக்தர்களின் வருகை இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வரும் பக்தர்கள் தங்குவதற்கு அடிவார பகுதியில் லாட்ஜ்கள் உள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை பார்த்த சிலர் தற்போது தங்களது வீடுகளை லாட்ஜ்களாக மாற்றி உள்ளனர். காற்றோட்டமில்லாமல், அவசரகால வெளியேறும் வழி போன்ற போதிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலர் உரிய தகுதிச் சான்றிதழும் பெறவில்லை.

இதனால் இதுபோன்ற லாட்ஜ்களில் தங்கும் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத லாட்ஜ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பழநி வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், தங்கும் விடுதி நடத்த நகராட்சி நகரமைப்பு பிரிவில் உரிய அனுமதி ஆணை பெற்றிருக்க வேண்டும். அனுமதி ஆணை வரைபடத்தில் உள்ளவாறு கட்டிடம் கட்டியிருக்க வேண்டும். தீயணைப்புத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையிடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். தற்போது பழநி நகரில் உள்ள லாட்ஜ்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உரிய அனுமதி இல்லாமல் இயங்கும் லாட்ஜ்களுக்கு சீல் வைக்கப்பட்டு, அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : houses ,Palani , Homes , Palani Inn
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...