×

நீலகிரியில் கரடி நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கரடிகளின் எண்ணிக்கை  அதிகரித்துள்ள நிலையில், தேயிலை தோட்டங்களுக்கு பணிக்கு செல்லும்  தொழிலாளர்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.   நீலகிரி மாவட்டத்தில்  தற்போது எங்கு பார்த்தாலும் கரடிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. தேயிலை  தோட்டங்கள், விவசாய நிலங்கள், மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகள்,  சாலைகள் என எங்கு பார்த்தாலும் கரடிகளின் நடமாட்டம் மிகவும்  அதிகரித்துள்ளது.

 மனிதர்களை கண்டால் சிறுத்தை, புலி உட்பட அனைத்து  விலங்குகளும் ஓட்டம் பிடிக்கும். ஆனால், கரடி மட்டுமே மனிதர்களை கண்டால்  விரட்டுகிறது. மேலும், கடுமையாக தாக்கி பலத்த காயம் ஏற்படுத்துகிறது.  இதனால், சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனால், பெரும்பாலான  தொழிலாளர்கள் தற்போது தேயிலை தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்வதை  தவிர்க்கின்றனர்.   குறிப்பாக, மஞ்சூர், தூதூர்மட்டம் போன்ற  பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் கரடிகளின் எண்ணிக்கை பல மடங்கு  அதிகரித்துள்ள நிலையில், அவைகளின் தாக்குதலுக்கு பயந்து பலர் தேயிலை  தோட்டங்களுக்கு செல்வதை தவிர்த்துவிட்டனர். மேலும், அதிகாலை நேரங்களில்  வாக்கிங் செல்பவர்கள், வெளியூர் சென்று இரவு நேரங்களில்  சொந்த  கிராமங்களுக்கு செல்பவர்களும் கரடிகளுக்கு பயந்து வெளியில் செல்வதையே  தவிர்த்து வருகின்றனர்.

 மக்கள் வாழும் பகுதிகளில் கரடிகளின்  நடமாட்டத்தை குறைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்போது  பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். யானை போன்ற  பெரிய விலங்கு என்றால் விரட்டலாம். ஆனால், இவைகள் புதர்களுக்குள்ளும்,  தேயிலை தோட்டங்களுக்குள்ளும் பதுங்கிக் கொள்வதால் இவைகளை வனத்துறையினரும்  விரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 மேலும், ஏதேனும் ஒரு இடத்தில் தொல்லை  உள்ளது என்றால், அதனை கூண்டு வைத்து பிடிக்க முடியும். ஆனால், தற்போது  நீலகிரி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் கரடிகளின் தொல்லை உள்ளதால் அவைகளை  கட்டுப்படுத்த முடியாமலும், விரட்ட முடியாமலும் வனத்துறையினர் விழி  பிதுங்கி நிற்கின்றனர்.   ேமலும், நாளுக்கு நாள் கரடிகளின் எண்ணிக்கை  அதிகரித்து வரும் நிலையில், ஓரிரு ஆண்டுகளில் கரடி - மனித மோதல் மிகவும்  அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வன விலங்கு ஆர்வலர்கள் வருத்தம்  தெரிவிக்கின்றனர்.

Tags : Nilgiris , public fears, bear,nilagiri,ooty
× RELATED குன்னூர் அருகே சிறுத்தை, கரடி வீடு...