×

தேன்மொழி வெட்டப்பட்டது குறித்து உரிய புலன் விசாரணை நடைபெற்று வருகிறது: ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து உரிய புலன் விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். ரோட்டைச் சேர்ந்த தேன்மொழி, எழும்பூர் பெண்கள் விடுதியில் தங்கியபடி சென்னை கீழ்பாக்கம் தமிழ்நாடு கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலகத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிறார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர், தேன்மொழியை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து விடுதி திரும்ப காத்திருந்த தேன்மொழியை, சுரேந்தர் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த சுரேந்தர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், தேன்மொழியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தாடை, கை விரல்களில் காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார். இதனால் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து அலறி ஓடினர்.

இதற்குள் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் முன் பாய்ந்து சுரேந்தரும் தற்கொலைக்கு முயன்றார். இதில் சுரேந்தர் தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேன்மொழியை ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சந்தித்து, அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்தார். அப்போது பணியிலிருந்த காவலர்கள், ரயில்நிலைய ஊழியர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேன்மொழியின் உயிருக்கு ஆபத்தில்லை என்றும், தேன்மொழி வெட்டப்பட்டது குறித்து புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும் விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும் என்று சைலேந்திர பாபு உறுதி அளித்துள்ளார்.


Tags : Sinhalese: Railway Police DGP Cylindra Babu , Thenmozhi, Investigation, Railway Police, DGP Silendra Babu
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...