×

வெள்ளி விழா கொண்டாடும் நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாகுமா?

*தென்மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை : மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் வெள்ளி விழா காணும் வேளையில் இந்தாண்டிலிருந்தாவது தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என தென்மாவட்ட பயணிகள் விரும்புகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், குமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மும்பை, புனே நகரங்களில் வசிக்கின்றனர். மும்பையில் வியாபாரம், பேப்பர் வினியோகம், வேர்கடலை மற்றும் தென்னிந்திய உணவு வகைகள் விற்பனையில் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்களே பெரும் பங்கு வகிக்கின்றனர்.

தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், கோவைக்கும், பெங்களூருக்கும் தினசரி ரயில் சேவைகள் உண்டு. ஆனால் கடந்த கால் நூற்றாண்டு காலமாக மும்பைக்கு மட்டும் தினசரி ரயில் சேவை இல்லை. வாரம் ஒருநாள், வாரம் இருநாள், வாரம் 4 நாட்கள் என இயக்கப்படும் ரயில்களும் பயணிகளை குழப்பும் வகையிலே இயக்கப்படுகிறது.  திங்கள் கிழமை திருநெல்வேலியில் இருந்து புறப்படும், செவ்வாய் கிழமை நாகர்கோவிலில் இருந்து வரும் என மும்பைக்கு செல்லும் ரயில்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு காலநேரத்தால் இயங்குவதால் பயணிகள் குழம்பி தவிக்கின்றனர். தினமும் குறித்த நேரத்தில் ஒரு ரயில் மும்பைக்கு தேவை என்பது தென்மாவட்ட பயணிகளின் பல ஆண்டுகால கனவாகும்.

மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இவ்வாண்டு வெள்ளிவிழா கொண்டாடி வருகிறது. கடந்த 1995ம் ஆண்டு ரயில்வே அமைச்சர் ஜாபர் ஷெரிப்பால் மும்பை - நாகர்ேகாவில் எக்ஸ்பிரஸ் இயக்கி வைக்கப்பட்டது. மும்பை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (எண்கள் 16339/16340) பங்காருபேட், சேலம், மதுரை வழியாக வாரத்தில் 4 நாட்களும், மற்றொரு மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்(எண்கள் 16351/16352) ரேணுகுண்டா, விழுப்புரம், திருச்சி வழியாக வாரத்தில் இரு நாட்களும் வருகின்றன. இந்த ரயில்களை ஒரே ரயிலாக்கி தினசரி இயக்கிட வேண்டும் என பயணிகள் அளித்த கோரிக்கை இன்று வரை செவிமெடுக்கப்படவில்லை.

பின்னாளில் நெல்லை தொகுதி எம்.பி.யாக ராமசுப்பு இருந்தபோது நெல்லை - தாதர் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ், நெல்லை - தாதர் வாரம் ஒருநாள் எக்ஸ்பிரசும் இயக்கப்பட்டன. ஆனால் இவை எதுவுமே தினசரி ரயில் என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. அதிலும் நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ் தொடர்ச்சியாக 27 மணி நேரம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இயக்கமின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது. எனவே வெள்ளி விழா கொண்டாடும் வேளையில் தென்மாவட்டங்களில் இருந்து மும்பைக்கு தினசரி அதிவேக எக்ஸ்பிரஸ் இயக்கிட வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.

இதுகுறித்து மும்பை தமிழின ரயில் பயணிகள் சங்க பொதுசெயலாளர் அப்பாத்துரை, தலைவர் அண்ணாமலை ஆகியோர் கூறுகையில், ‘‘மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இன்றும் காலாவதி பெட்டிகளை கொண்டு இயங்குகிறது. கழிவறையில் தண்ணீர் ஒழுகுகிறது. சில சமயங்களில் தண்ணீரின்றி பயணிகள் அவதியுறுகின்றனர். கரப்பான் பூச்சிகள் தொல்லையும் அதிகம். லட்சக்கணக்கான தமிழர்கள் வசிக்கும் மும்பைக்கு நாகர்கோவில் அல்லது நெல்லையில் இருந்து ஒரு தினசரி அதிவேக எக்ஸ்பிரஸ் இயக்கிட ரயில்வேதுறை தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரசை பொறுத்தவரை திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் அதை சரியாக பராமரிப்பது இல்லை. அவசர கால இ.க்யூ டிக்கெட்டுகளை நெல்லை, நாகர்கோவில் மக்களுக்கு அவர்கள் வழங்குவதும் இல்லை.  

மும்பை - டில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் 1375 கி.மீ தூரத்தை 16 மணி நேரத்தில் கடக்கிறது. ஆனால் மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் 1875 கி.மீ தூரத்தை சுமார் 40 மணி நேரத்தில் கடக்கிறது. எனவே இந்த ரயிலை சூப்பர் பாஸ்ட் ரயிலாக இயக்கினால் 5 மணி நேரம் பயண நேரம் குறையும். வெள்ளி விழா ஆண்டில் மும்பை- நாகர்கோவில் ரயில் பெட்டிகளை மாற்றி சூப்பர் பாஸ்டாக இயக்கிட வேண்டும் என ரயில்வே அமைச்சரிடமும், தமிழக எம்பிக்களிடமும் மனு அளித்துள்ளோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டால் மும்பை வாழ் தமிழர்கள் பயன் அடைவர்.’’ என்றனர்.

Tags : Nagercoil ,silver ceremony , Southern District,nagarcoil,Mumbai , weekly Train, Daily Train
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை