×

மீண்டும் திசை திரும்பிய 'வாயு புயல்': அடுத்த 48 மணி நேரத்தில் குஜராத்தை நெருங்கும் என தகவல்

காந்திநகர்: வாயு புயல் மீண்டும் குஜராத்தை நெருங்கி வருவதாக மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் எம்.ராஜீவன் தெரிவித்துள்ளார். வாயு புயல் திசையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அது மீண்டும் குஜராத் மாநிலத்தை நோக்கி நகர்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி தீவிரமடைந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்தது. இது மேலும் வாயு புயல் வலுப்பெற்று சூறாவளிப் புயலாக உருமாறி ஜூன் 13ம் தேதி காலையில் குஜராத் மாநிலம் துவார்கா மற்றும் வேரவல் இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மணிக்கு 145 கி.மீ முதல் 170 கி .மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை குஜராத் மாநில அரசு மேற்கொண்டது.  புயலால் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளிலிருந்து 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்திய கடலோர காவல்படை, கடற்படை மற்றும் விமானப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குஜராத் கடலோரப் பகுதிகளில் உள்ள 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அகமதாபாத்தில் இருந்து போர்பந்தர், டையூ, காண்ட்லா, முந்த்ரா மற்றும் பாவ்நகர் பகுதிகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. மேலும் கேரளா, மஹாராஷ்டிரா, கொச்சின் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜூன் 13ம் தேதி காலை புயல் செல்லும் பாதையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. புயலின் மையமானது வடமேற்கு திசையில் நகரத்தொடங்கியது. இதனால், புயல் குஜராத்தை தாக்க வாய்ப்பு இல்லை எனவும் அறிவித்திருந்தது. எனினும், கடலோரப்பகுதிகளில் புயல் காற்றுடன் கனமழை பெய்யலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால், முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் மீண்டும் தங்களது குடியிருப்பு பகுதிக்கே செல்ல அம்மாநில முதல்வர் அறிக்கை விடுத்திருந்தார். ஆனால் தற்போது, வாயு புயலின் திசையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மறுபடியும் இந்த புயல் குஜராத் பகுதியை நோக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த புயல் வருகிற 17, 18 தேதிகளில் கட்ச் பகுதியை தாக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : wind storm ,Gujarat , Gas Storm, Gujarat, Central Earth Sciences Department
× RELATED சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்