×

திருப்பதி சோதனைச் சாவடியில் தமிழக பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: 6 போலீசாரை இடமாற்றம் செய்து அம்மாவட்ட எஸ்.பி. உத்தரவு

திருப்பதி: திருப்பதி சோதனைச் சாவடியில் தமிழக பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 6 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் திருமண நிகழ்ச்சிக்காக, காஞ்சிபுரத்தை அடுத்த மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த 40 பேர் சென்றனர். அலிபிரி சோதனைச்சாவடியில் சோதனை நடத்தியபோது கன்னியப்பன் என்பவரிடமிருந்து புகைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. பாதுகாப்பு ஊழியர்கள் அதை பறித்து குப்பையில் வீச முயன்றனர். அதை கன்னியப்பன் எடுக்க முயன்ற போது, அங்கு நின்று கொண்டிருந்த போலீசார், கன்னியப்பனை தாக்கினர். அவரது உறவினர்கள் தடுக்க முயன்றபோது தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் போலீசார் 10க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர். இதில் கன்னியப்பன், டில்லிபாபு மற்றும் சந்திரா என்ற பெண்மணிக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, காயமடைந்த 3 பேருக்கும் திருமலையில் உள்ள அரசு அஸ்வினி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. மன அமைதி வேண்டியும், நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் கோயிலுக்கு சென்றவர்களுக்கு நடந்த சோதனை பக்தர்கள் மத்தியில் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, திருப்பதி வரும் பக்தர்கள் புகை பொருட்கள், மது, புகையிலை உள்ளிட்ட எவ்வித போதை பொருட்களையும் எடுத்துச்செல்ல கூடாது என்றும், மீறி எடுத்து செல்வோர் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் எனவும் ஆந்திர காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக திருப்பதி காவல் கண்காணிப்பாளர் விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 சிறப்பு அதிரடி போலீசார் உட்பட 6 பேரை பணியிட மாற்றம் செய்து அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Tamil Nadu ,devotees ,Tirupati ,policemen , Tirupati, checkpoint, Tamil pilgrims, attackers, cops, relocation
× RELATED உத்திரமேரூர் வேணுகோபாலசாமி கோயிலில்...