×

விமான நிலைய வளாகத்தில் தீவிபத்து

சென்னை: சென்னை பழைய விமான நிலையத்தில் கேட் எண் 5க்கும், கேட் எண் 6க்கும் இடைப்பட்ட பகுதியில் விமான நிலையத்தில் சேரும் பழைய குப்பை கழிவுகள், மரக் கழிவுகளை சேமிக்கும் கிடங்கு உள்ளது. இந்த கழிவுகளை  வாரத்தில் 2 நாட்கள் குறிப்பாக வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை 4 அளவில் விமான நிலைய ஊழியர்கள் தீ வைத்து எரிப்பது வழக்கம். இப்படி எரிக்கும்போது அந்த தீ வேறு பகுதிக்கு பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் தீயணைப்பு வண்டி தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும்.அதேபோல், நேற்று மாலை 4 மணி அளவில் இந்த பழைய கழிவுகளை தீ வைத்து எரிக்கத் தொடங்கினர். கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் சென்னை புறநகர் பகுதியில் தரைக்காற்று பலமாக வீசி வருகிறது. அதேபோல், நேற்று  குப்பை கழிவுகளை எரிக்கத் தொடங்கியபோது பலமாக காற்று வீசியது.இதையடுத்து குப்பை மேட்டில் எரிந்து கொண்டிருந்த தீ வேகமாக வெளியிலும் பரவத் தொடங்கிவிட்டது.

 இதையடுத்து பரபரப்படைந்த விமான நிலைய ஊழியர்கள் தீயணைப்பு வண்டியின் மூலமாக சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த நேரத்தில், 5வது நுழைவாயில் வழியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாலை 5.15 மணி விமானத்தில் டெல்லி செல்வதற்காக விமான நிலையத்திற்குள் செல்ல இருந்தார். அதைபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  திருச்சியில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு வந்து 6வது வாசல் வழியாக வெளியில் வருவதாக இருந்தார். இடைப்பட்ட நேரத்தில் குப்பை கொளுத்தியதால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் பரபரப்பு ஏற்பட்டது.இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இது வாரம்தோறும் நடைபெறும் வழக்கமான பணிதான். காற்று சற்று அதிகமாக வீசியதால் தீ வேகமாக பரவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு  வண்டி மூலம் கட்டுக்கொள் கொண்டு வந்துள்ளோம். இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விமான போக்குவரத்துக்கோ மற்ற சரக்கு போக்குவரத்துக்கோ எந்த பாதிப்பும் இல்லை’’ என்றனர்.

Tags : airport premises , Fire, airport, premises
× RELATED விமான நிலைய வளாகத்தில் திடீர் தீ: அதிகாலையில் பரபரப்பு