×

ஈஸ்டர் தின தாக்குதல் சவுதியில் சிக்கிய 5 பேர் இலங்கைக்கு நாடு கடத்தல்: கொழும்புவில் தீவிர விசாரணை

கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில்  தொடர்புடைய 5 தீவிரவாதிகள், சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தொடர் மனித வெடிகுண்டு தாக்குதல்  நடத்தப்பட்டது. இதில், 258 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, ஐஎஸ் உத்தரவுப்படி இந்த தாக்குதல்களை நடத்தியது. இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.  தாக்குதல்  தொடர்பாக 6 எம்பி.க்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தடை செய்யப்பட்ட தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக இருந்த ஜக்ரான் காசிமின் நெருங்கிய கூட்டாளி முகமது மிலான் உள்பட சிலரை சந்தேகத்துக்குரிய குற்றவாளிகளாக இலங்கை அரசு அறிவித்தது. இவன் மட்டக்களப்பில் உள்ள  காத்தான்குடியில் இரண்டு போலீசாரை கொன்ற வழக்கில் கடந்தாண்டு நவம்பர் முதல் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்தான். இந்நிலையில், அவர்களை தேடி சவுதி சென்ற இலங்கை போலீசார், முகமது மிலான் உள்பட 5  பேரை கைது செய்தனர்.

இது குறித்து இலங்கை காவல் துறை செய்தி தொடர்பாளர் ருவான் குணசேகர கூறுகையில், ``சந்தேகத்துக்குரிய குற்றவாளிகளான மிலான், முகமது மிலா, அபுசாலி, இஸ்மாயில், ஷானவாஸ் சாப்ரி ஆகிய 5 பேரையும் ஜெடாவில் கைது செய்த  குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் அவர்களை இலங்கை அழைத்து வந்தனர். ’’ என்றார்.‘‘ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 107 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 77 பேரிடம் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 25 பேர் தீவிரவாத புலனாய்வு துறை கட்டுப்பாட்டின் கீழ்  விசாரிக்கப்படுகின்றனர்’’ என்றும் அவர் கூறினார்.



Tags : attack ,investigation ,Easter Day ,Saudi ,Colombo , Saudi, Deportation , Sri Lanka
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...