×

புகலிடமும், நிதியுதவியும் அளித்து தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளே தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்: ஷாங்காய் மாநாட்டில் பாக். மீது மோடி மறைமுக தாக்குதல்

பிஷ்கெக்: “தீவிரவாதத்துக்கு ஆதரவு, நிதியுதவி அளித்து ஊக்குவிக்கும்  நாடுகளே, அந்த தீவிரவாத அமைப்புகளின் தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்,” பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார்.  இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளை கொண்டு ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ செயல்படுகிறது. இதன் 15வது மாநாடு கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர்  பிஷ்கெக்கில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தீவிரவாதம் இல்லாத சமுதாயத்தை இந்தியா விரும்புகிறது. கடந்த ஞாயிறன்று நான் இலங்கை சென்றேன். அங்கு, ஈஸ்டர் தினத்தன்று மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட செயின்ட் ஆன்டனி தேவாலயத்தை பார்வையிட்டேன். அங்கு  அப்பாவி உயிர்களை பலி வாங்கிய தீவிரவாதத்தின் கோர முகத்தை பார்த்தேன்.தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவதற்காக ஒவ்வொரு நாடும் தனது குறுகிய எல்லையில் இருந்து வெளியே வந்து, தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய  வேண்டும். எந்தெந்த நாடுகள் தீவிரவாத்துக்கு ஆதரவு தருகிறதோ. உதவிகள் செய்கிறதோ,  நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்துகிறதோ அந்த நாடுகள்தான் அந்த தீவிரவாத அமைப்புகளின் தாக்குதலுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

ஷாங்காய் அமைப்பில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்துக்கு எதிராக ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தீவிரவாதம் குறித்த சர்வதேச மாநாட்டையும் நடத்த வேண்டும். இலக்கியமும், கலாச்சாரமும் நமது சமூகத்துக்கு  நேர்மறையான ஆதாயங்களை வழங்குகின்றன. குறிப்பாக, சமுதாயத்தில் உள்ள இளைஞர்களிடையே தீவிரவாதம் பரவுவதை இவை தடுக்கின்றன.  இவ்வாறு மோடி பேசினார்.  பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள்தான், இந்தியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த  அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு நிதியுதவியும், புகலிடமும் கொடுக்கிறது. பாகிஸ்தானின் இந்த செயலை மறைமுகமாக  சுட்டிக்காட்டியே, மோடி தனது உரையை நிகழ்த்தினார். கடந்த 2016ம் ஆண்டு பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லை. கடந்த பிப்ரவரியில் காஷ்மீர் மாநிலம்,  புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் பாதித்துள்ளது.

மோடி- இம்ரான் வாழ்த்து
ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்ற அனைத்து நாட்டு தலைவர்களுடனும் பிரதமர் மோடி பேசினார். அவர்களுடன் விருந்து சாப்பிட்டார். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை மட்டும் அவர் கண்டுக் கொள்ளவில்லை என கூறப்பட்டது.  ஆனால், மாநாட்டின் இடையே அவர்கள் இருவரும் நேருக்கு நேர் பார்த்தபோது பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து கொண்டதாக மாநாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைவர்களை வரவேற்க எழுந்து நிற்காத இம்ரான்
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஒவ்வொரு  நாட்டுத் தலைவரும் அரங்கத்துக்கு வந்த போது, மற்ற நாடுகளின் பிரதிநிதிகளும், தலைவர்களும் எழுந்து நின்றபடி கைத்தட்டி வரவேற்று கொண்டிருந்தனர். அப்போது, இம்ரான்கான் மட்டும்  தனது இருக்கையில் இருந்து எழாமல் அமர்ந்து கொண்டே இருந்தார். இதை பார்த்து மற்ற நாட்டு தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கட்டத்தில் சில நிமிடங்கள் மட்டுமே எழுந்த நின்ற இம்ரான், மீண்டும் இருக்கையில் அமர்ந்து  கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.  சமீபத்தில், சவுதி அரேபியாவில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற இம்ரான்கான், அந்நாட்டு மன்னர் சல்மானை  சந்தித்து பேசினார். அப்போது, தான் கூற வேண்டிய சில விஷயங்களை மன்னரின் மொழி பெயர்ப்பாளரிடம் இம்ரான் கூறினார். அதை மன்னரிடம் அந்த மொழி பெயர்ப்பாளர் கூறி, பதில் கருத்தை பெற்று கூறுவதற்குள் இம்ரான் எழுந்து சென்று  விட்டார். அவருடைய இந்த செயலை பார்த்து மன்னர் அதிர்ச்சி அடைந்தார்.




Tags : Countries ,attack ,Pak ,Modi ,Shanghai Conference , Providing,attack, Shanghai Conference ,Modi,Modi
× RELATED ஜாதி, மத சண்டையை உருவாக்கி குளிர் காய்கிறது பாஜ: கனிமொழி எம்பி தாக்கு