×

அம்பத்தூர் ஐசிஎப் காலனியில் இரவில் அடிக்கடி மின்தடை: தூக்கம் இழந்து தவிக்கும் மக்கள்

அம்பத்தூர்: அம்பத்தூர், ஐ.சி.எப் காலனியில் கடந்த இரு வாரமாக  இரவு நேரங்களில் தொடர்ந்து மின்தடை செய்யப்படுவதால், பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றனர்.அம்பத்தூர், ஐ.சி.எப் காலனியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், கடந்த 2 வாரமாக  இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதுடன், குறைந்த அழுத்த மின்சாரம்  விநியோகிப்பதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை விட்டு விட்டு மின்தடை செய்யப்படுவதால் வீடுகளில் காற்றோட்டம் இல்லாமல் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்க முடிவதில்லை. வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருக்கும் பொருட்கள் கெட்டு வீணாகி  வருகின்றன. குறைந்த மின் அழுத்த பிரச்னையால் வீடுகளில் உள்ள மின்சாதனப் பொருட்கள் பழுதாகும் நிலை உள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால் சரிவர பதில் அளிக்க மறுப்பதாக கூறப்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் அம்பத்தூர், ஐ.சி.எப் காலனியில்  அடிக்கடி ஏற்படும் மின்தடை மற்றும் குறைந்த அழுத்த மின்சாரம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், பொது நலச் சங்கங்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.




Tags : ICF ,Ambattur , ICF Colony, Ambattur,sleep deprived, people
× RELATED 250 ரயில்வே ஊழியர்கள் கைது