×

அயனாவரம் என்எம்கே தெருவில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களால் போக்குவரத்துக்கு இடையூறு: அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் கூட வர முடியாத அவலம்

கீழ்ப்பாக்கம்: அயனாவரம் எம்எம்கே தெருவில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். சென்னை மாநகராட்சி, 8வது மண்டலம், 97வது வார்டுக்கு உட்பட்ட அயனாவரம் என்.எம்.கே.தெரு முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. தினசரி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என  ஆயிரக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் மார்க்கெட் மற்றும் மெயின் ரோட்டுக்கு சென்று வர இவ்வழியாகத்தான் செல்ல முடியும். 30 அடி அகலம் கொண்ட இந்த தெருவின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ  அனுமதியின்றி தனியார் சிலர் 4 மாடி கட்டிடங்களை அதிகளவில் கட்டியுள்ளனர். இதில் சில தனியார் பள்ளிகளும் அடங்கும். இந்த கட்டிடங்களில் முறையான பார்க்கிங் வசதியும் இல்லாததால், அங்கு வரும் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் 30 அடி தெரு 10  அடியாக குறைந்துள்ளது. செல்லியம்மன் கோயில் தெருவில் இருந்து  தொடங்கும் ஆக்கிரமிப்பு வி.பி.காலனி வரை தொடர்கிறது.

இதன் காரணமாக அப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துடன் இந்த பகுதியை  கடந்து செல்லும் நிலை உள்ளது. வாகனங்களில் செல்வோர் இப்பகுதியை கடக்க நீண்ட நேரமாகிறது.  எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என இப்பகுதி மக்கள் மாநகராட்சி 8வது மண்டல அதிகாரிகள் மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு காரணமாக அந்த பகுதிக்கு அவசர காலங்களில் தண்ணீர் லாரி, ஆம்புலன்ஸ், தீயணைப்பு, ரேசன் பொருட்கள் ெகாண்டு செல்லும் வாகனம் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் இந்த குறுகிய  பாதையில் வந்து செல்ல முடியவில்லை.

மேலும் கடந்த ஆண்டு என்.எம்.கே.தெருவில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 3 மாடி கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் சுமார் 2 மணி நேரம் வேறு பாதையில்  சுற்றிவந்தும் கூட தீயை அணைக்க முடியவில்லை.
இதேபோல் கடந்த மாதம் உடல் நலம் பாதித்த பெண் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அவ்வழியே ஆம்புலன்ஸ் வர முடியாமல் மாற்று பாதையில் சுற்றி வந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுபோல் பல சம்பவங்கள் நடந்துள்ளது. எனவே இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.



Tags : buildings ,Iron Ore NaMay Street , Ambulances, available, emergency
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...