×

வைர நகைகள் வாங்குவது போல் நடித்து லாட்ஜில் தங்கிய வியாபாரிகள் முகத்தில் மிளகாய்பொடி தூவி நகை பறிக்க முயற்சி

* பிடிபட்ட நபருக்கு சரமாரி அடிஉதை
* தப்பி ஓடிய 3 பேருக்கு போலீஸ் வலை

சென்னை: தேனி பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம் (48), ரவிக்குமார் (26). தங்கம் மற்றும் வைர வியாபாரிகளான இருவரும், ஒவ்வொரு மாதமும் சென்னையில் முகாமிட்டு வைரம் மற்றும்  வைடூரியங்களை விற்பனை செய்வது வழக்கம்.  அந்த வகையில், கடந்த வாரம் இருவரும் தி.நகர் மகாலட்சுமி தெருவில் உள்ள தனியார் லாட்ஜ்  ஒன்றில் அறை எடுத்து தங்கினர். இவர்களுக்கு உதவியாக 2 பேர்  உடனிருந்தனர்.அப்போது, வியாபாரி செல்வத்தை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், ராசி கற்கள் உள்ள மோதிரம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு செல்வம், அவர் தங்கியுள்ள லாட்ஜிக்கு வரும்படி கூறியதாக  கூறப்படுகிறது. அதன்படி செல்போனில் பேசிய நபர் உட்பட 4 பேர் நேற்று முன்தினம் லாட்ஜிக்கு வந்தனர்.அப்போது, நகை பற்றி இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. ஒரு கட்டத்தில் வைர நகை வாங்க வந்த 4 பேரும், தயாராக கொண்டு வந்த மிளகாய் பொடியை வைர  வியாபாரிகளான ரவிக்குமார் மற்றும் செல்வம் உள்ளிட்ட 4 பேர் மீதும் தூவி விட்டு நகைகளை அள்ளிக்கொண்டு  ஓட முயன்றனர். மிளகாய் பொடி கண்களில் பட்டதால் 4 பேரும் அலறி துடித்தனர்.

சத்தம் கேட்டு லாட்ஜ் ஊழியர்கள் ஓடி வந்தனர். அப்போது எதிரே தப்பி ஓடிய 4 பேரையும் ஊழியர்கள் மடக்கி பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார். மற்ற 3 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட  நபரை லாட்ஜ் ஊழியர்கள் அடித்து உதைத்து அவரிடம் இருந்து ₹2.50 லட்சம் மதிப்புள்ள வைர மற்றும் வைடூரிய கற்கள் பதிக்கப்பட்ட நகைகளை மீட்டனர்.பின்னர், வைர வியாபாரி செல்வம் மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  லாட்ஜ் ஊழியர்களிடம் இருந்து கொள்ளையனை மீட்டனர். பிறகு காவல்  நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, பிடிபட்ட நபர், மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த பாஸ்கர் (38) என்பது தெரிந்தது. இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து வைர நகைகள் வாங்குவது  போல் கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.  தப்பி ஓடிய கூட்டாளிகள் மதுரையை சேர்ந்த பாண்டி (39) உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.



Tags : traders , Pretending,lodge ,snatch, chilli powder ,faces
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...