ஆந்திராவில் `அம்மா படி’’ திட்டத்தின் மூலம் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும் அம்மாவுக்கு ஆண்டுக்கு 15,000: முதல்வர் ஜெகன் அறிவிப்பு

திருமலை: `அம்மா படி பாட்டா ’திட்டத்தின் மூலம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் ஆண்டுதோறும் ₹15 ஆயிரம் வழங்கப்படும் என்று  என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்தார்.ஆந்திர மாநிலம், குண்டூரில் `ராஜண்ணா படி பாட்டா’ (ராஜண்ணா பள்ளி பாதை) எனும் திட்டத்தின் கீழ் முதல் முறையாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பாடம் சொல்லிக் கொடுக்கும் (அட்சரா பியாசம்) நிகழ்ச்சி  நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று குழந்தைகளின் கையை பிடித்து பலகையில் `ஓம் நமச்சிவாய’’ என்று எழுத வைத்தார். இதையடுத்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது:ஒவ்வொரு  பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் நன்றாக படித்து டாக்டர், இன்ஜினியர், கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவுகள் இருக்கும்.

ஆனால், இந்த கனவுகள் நிறைவேறுவதற்கு பெற்றோர்கள் கடன்காரர்கள் ஆக கூடாது என்பதே எனது விருப்பம்.எனது பாதயாத்திரையின் போது பள்ளி செல்லும் மாணவர்களின் கஷ்டங்களையும்,  குறைகளையும் நேரில் பார்த்தேன். வீட்டின் வறுமையால் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் படிக்க முடியாததால் தற்கொலை செய்து  கொண்ட காட்சிகளையும் பார்த்தேன். இவை அனைத்தும் மாற வேண்டும்.  இந்த மேடையின் மூலமாக ஒவ்வொரு தாய்க்கும் நான் வாக்குறுதி அளிக்கிறேன். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எந்தப் பள்ளிக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். அவ்வாறு பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு `அம்மா படி’ (அம்மா  பள்ளி) திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் ₹15 ஆயிரம் வழங்கப்படும்.எனவே ஒவ்வொரு தாய், தந்தையும் தங்கள் பிள்ளைகள் அனைவரையும் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இதனை ஒவ்வொரு பிள்ளைகளின் தாய் மாமாவாக கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் ஆதிமூலப்பு சுரேஷ், உள்துறை அமைச்சர் சுச்சரித்தா எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags : school ,Andhra Pradesh , `Mummy 's mobile phone, Chief Minister Jagan
× RELATED உண்மை, சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட...