×

முதல் வெற்றிக்கு ஆப்கானிஸ்தானுடன் தென் ஆப்ரிக்கா பலப்பரீட்சை!

கார்டிப்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் இதுவரை ஒரு வெற்றி கூட பெற முடியாமல் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ள தென் ஆப்ரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில், பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட தென் ஆப்ரிக்கா ஹாட்ரிக் தோல்வியை சந்தித்ததால் சோர்ந்து  போயுள்ளது. இங்கிலாந்து, வங்கதேசம், இந்தியாவுக்கு எதிராக மண்ணைக் கவ்விய அந்த அணி, வெஸ்ட் இண்டீசுடன் மோதிய ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டதால் ஒரு புள்ளியை பெற்று 9வது இடத்தில் உள்ளது.ஆப்கானிஸ்தான் அணியும் தொடர்ச்சியாக 3 தோல்வியைத் தழுவி, புள்ளிகள் எதுவும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில், இரு அணிகளும் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் இன்று மோதுகின்றன. அரை  இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால், ஆப்கானிஸ்தானை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற இக்கட்டான நிலையில், டு பிளெஸ்ஸி தலைமையிலான தென் ஆப்ரிக்க வீரர்கள் கடும் நெருக்கடியுடன்  களமிறங்குகின்றனர்.

அதே சமயம், பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசளித்து தங்களின் திறமையை நிரூபிக்கும் உறுதியுடன் ஆப்கன் வீரர்கள் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. தென் ஆப்ரிக்கா: பேப் டு பிளெஸ்ஸி (கேப்டன்), குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், லுங்கி என்ஜிடி, டுவைன் பிரிடோரியஸ், டாப்ரைஸ் ஷம்சி, ராஸி வான்டெர் டுஸன், ஹாஷிம் அம்லா, ஜீன் பால் டுமினி,  எய்டன் மார்க்ராம், கிறிஸ் மோரிஸ், அண்டில் பெலுக்வாயோ, காகிசோ ரபாடா, பியூரன் ஹெண்ட்ரிக்ஸ்.ஆப்கானிஸ்தான்: குல்பாதின் நயிப் (கேப்டன்), அஸ்கர் ஆப்கன், ஹமித் ஹசன், ஹஸ்ரத் ஸசாய், நஜிபுல்லா ஸத்ரன், ரகமத் ஷா (விக்கெட் கீப்பர்), ஷமியுல்லா ஷின்வாரி, அப்தாப் ஆலம், தவ்லத் ஸத்ரன், ஹஷ்மதுல்லா ஷாகிதி, முகமது நபி,  முஜீப் உர் ரகுமான், நூர் அலி ஸத்ரன், ரஷித் கான், இக்ராம் அலி கில்.

முதலிடத்துக்கு முன்னேற ஆஸ்திரேலியா முனைப்பு
லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது இலங்கை. இரு அணிகளும் தலா 4 போட்டியில் விளையாடி உள்ள நிலையில் ஆஸ்திரேலியா (6 புள்ளி)  இரண்டாவது இடத்திலும், இலங்கை அணி (4 புள்ளி) 5வது இடத்திலும் உள்ளன. இலங்கை அணி விளையாட இருந்த 2 போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டதால் அந்த அணிக்கு 2 புள்ளி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.புள்ளிப் பட்டியலில் முன்னேற இரு அணிகளுமே முனைப்பு காட்டுவதால் போட்டி மிகவும் சுவாரசியமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், பேட்  கம்மின்ஸ், ஜேசன் பெஹரண்டார்ப், நாதன் கோல்டர் நைல், ஆடம் ஸம்பா, நாதன் லயன்.இலங்கை: திமத் கருணரத்னே (கேப்டன்), சுரங்கா லக்மல், இசுரு உடனா, லசித் மலிங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), குசால் பெரேரா (விக்கெட் கீப்பர்), நுவன் பிரதீப், சுரங்கா லக்மல், ஜீவன் மெண்டிஸ், திசாரா பெரேரா, லாகிரு  திரிமன்னே, ஜெப்ரி வாண்டர்சே, மிலிண்டா வர்தனா, அவிஷ்கா பெர்னாண்டோ, தனஞ்ஜெயா டி சில்வா.



Tags : Test ,South Africa , South Africa ,Afghanistan , win
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை