×

வடமாநிலங்களில் அதிக வெற்றி பெற்றபோதும் தமிழகத்தில் பாஜவுக்கு இடம் கிடைக்காதது முதல்முறையல்ல: சென்னையில் ராம்விலாஸ் பஸ்வான் பேட்டி

சென்னை:  மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நேற்று சென்னை வந்தார். அப்போது, இந்திய உணவு கழக அதிகாரிகளை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்துக்கு தற்போது ஒரு லட்சத்து 90 ஆயிரம் டன் அரிசி மட்டுமே இந்திய உணவு கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிசியை பெற்று தமிழக மக்களுக்கு அரசு ரேஷன் மூலம் விநியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து பொது விநியோகம் தொடர்பாக எந்த ஒரு புகாரும் இதுவரை எங்களுக்கு வரவில்லை. இந்த முறை, மோடியின் சுனாமியால் அதிக இடங்களில் வெற்றிபெற முடிந்தது. அமேதி தொகுதியில் ராகுல் காந்தி கூட வெற்றி பெறவில்லை. எனவேதான், அவர்கள் மின்னணு இயந்திரத்தின் மீது குறை கூறுகின்றனர். தமிழகத்தில் அதிமுக  ஒரு இடத்தை மட்டுமே பிடித்தது. திமுக- காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களை பிடித்தது. எனவே, அவர்கள் மின்னணு இயந்திரங்களின் மீது குறை கூறுவது தவறு.

நாடு முழுவதும் மோடியின் அலை வீசிய போதும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை என்பது உண்மைதான். நாட்டின் மற்ற பகுதிகளைப்போல் அல்ல தமிழகம். இங்கு மாறுபட்ட சிந்தனையுள்ள மக்கள் உள்ளனர். தமிழகத்தில் பாஜகவுக்கு இடம் கிடைக்காதது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னும் இப்படி நடந்துள்ளது.நாட்டில் மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மக்கள் அரிசியை அதிகளவு விரும்புவதால், அந்த மாநிலங்கள் அரிசியையே அதிகமாக கேட்கின்றன. தேவைக்கேற்ப அரிசியை வழங்குகிறோம். கோதுமையை கேட்டால்  வழங்க தயாராக உள்ளோம். தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசி உள்ளிட்ட பொருட்களை பாதுகாக்க தேவையான அளவு கிடங்குகள் உள்ளன. அரியானா, பஞ்சாப், தெலங்கானா மாநிலங்களில் அதிகளவில் தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.  அங்கிருந்து தமிழகத்துக்கு உணவு பொருட்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால், அவை ஒரே மாதத்தில் காலியாகிவிடும்.  இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Bhajan ,interview ,Tamil Nadu ,Ramvilas Paswan ,Chennai ,North America , Baja , Tamil Nadu, Ramvilas Baswan, Chennai
× RELATED திமுக அளித்த புகாரில் ஒன்றிய...