தமிழில் பேச தெற்கு ரயில்வே தடைவிதித்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: தமிழில் பேச தடை விதித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட சுற்றறிக்கைக்கு பல்வேறு  அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் .ராமதாஸ் (பாமக நிறுவனர்):தெற்கு ரயில்வே துறையில் கோட்ட கட்டுப்பாட்டு அதிகாரிக்கும், நிலைய அதிகாரிகளுக்கும் இடையிலான அலுவல் சார்ந்த உரையாடல்கள் அனைத்தும் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் மட்டும்தான் இருக்க வேண்டும். எக்காரணத்தை  முன்னிட்டும் தமிழில் உரையாடக் கூடாது என்று ஆணையிடப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு தெளிவாக இருக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி இந்தியை திணிப்பதற்கான இந்த முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். வட இந்திய பணியாளர்களுக்கு தமிழ் கற்றுத் தருவதன் மூலமாகவே இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண முடியுமே தவிர, ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. இதே வாதம்  ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் பொருந்தும். மாறாக, மாநில மொழிகளைப் புறக்கணித்து விட்டு ஆங்கிலமும், இந்தியும்தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் அது தெற்கு ரயில்வே துறையில் தமிழர்களை  வெளியேற்றிவிட்டு, முழுக்க முழுக்க இந்தி பேசும் வட இந்தியர்களை  நியமிப்பதற்கே வழி வகுக்கும் இது ஆபத்தானது. எனவே, தெற்கு ரயில்வே துறையில் பணியாற்றும் வட இந்தியர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி விட்டு,  அவர்களுக்கு மாற்றாக தமிழர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): நரேந்திர மோடி தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, ‘இந்து - இந்தி - இந்தியா’ எனும் கோட்பாட்டில் முனைப்பாகச் செயல்பட தொடங்கி உள்ளது. அதனால்தான் மூர்க்கத்தனமாக இந்தி மொழித்  திணிப்பை எல்லா வகையிலும் நடைமுறைப்படுத்த தீவிரப்படுத்தி உள்ளது. விருப்பப் பாடம் என்று சொல்லி மும்மொழிக் கொள்கையைத் திணித்து அதன் மூலம் இந்தியைக் கற்கச் செய்வதற்கு பாஜ அரசு புதிய கல்விக் கொள்கை மூலம்  சதித்திட்டம் தீட்டுகிறது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கை, இந்தியை அப்பட்டமாகத் திணிப்பதற்கு வழி செய்து வெந்த புண்ணில் வேல் வீசி இருக்கிறது. தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் இந்தித் திணிப்பு சுற்றறிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது. மொழி உரிமைப் போர்க்களத்தில் ரத்தம் சிந்தி, உயிர்களை பலி கொடுத்து களம் கண்ட தமிழகம், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, இந்தித்  திணிப்புக்கு எதிராக சிலிர்த்து எழும் நெருப்போடு விளையாட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): தமிழ்நாட்டிலுள்ள ரயில் நிலையங்களில் பணியாற்றும் நிலைய அதிகாரிகள், பகுதி கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோர் கோட்ட கட்டுப்பாட்டு அலுவலகத்துடன் ஆங்கிலம் மற்றும்  இந்தியில்தான் தொடர்புகொள்ள வேண்டும். அந்தந்த மாநில மொழியை தவிர்க்க வேண்டுமென்று தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இது இந்தி பேசாத மாநிலங்களில் படிப்படியாக இந்தியை திணிப்பதற்கான முயற்சி எனவும், தமிழ்  உள்ளிட்ட மாநில மொழிகளை ஒதுக்குவதற்கான நடவடிக்கை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புவதுடன் இதனை வன்மையாக கண்டிக்கிறது.

மக்களோடு தொடர்புடைய நிலைய அதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள், டிக்கெட் பரிசோதகர், டிக்கெட் வழங்குபவர் உள்ளிட்டோர் தமிழ்மொழியில் தொடர்பு கொள்வதே பயனுள்ளதாக இருக்கும். இதற்கு மாறாக, இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான்  தொடர்பு கொள்ள வேண்டுமென கட்டாயப்படுத்துவது பொறுத்தமானதல்ல. முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்: தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் நிலைய அதிகாரிகளும், அனைத்துப் பிரிவுகளின் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் தொடர்பு கொள்ள வேண்டும். தவறான  புரிதல் ஏற்படாமல் தடுப்பதற்காக, தமிழில் பேசக் கூடாது என்று ரயில்வேயின் முதன்மை போக்குவரத்து திட்ட மேலாளர் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். பயணிகளின் பாதுகாப்பு பற்றிய உத்தியாகப் பார்வைக்கு இது தெரிந்தாலும் அதன்  உள்நோக்கம்  அபாயகரமானது. தமிழ்நாட்டுக்கு வடமாநிலத்தவர் பணிபுரிய வந்தால் இங்குள்ள மக்கள் இந்தியைக் கற்றுக்கொண்டு அவர்களோடு பேச வேண்டும் என்ற நியதி வகுக்கப்படுவது, தகவல் தொடர்பு தமிழில் கூடாது என  அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும் பணிபுரியும் மாநிலத்தின் மொழி அறியாதவர்களைக் கொண்டு அதிகார வர்க்க சக்திகள் ஒன்றிணைக்கப்படுவதும், அந்த மொழி தெரிந்தவர்களும் பேசக்கூடாது என உத்தரவிடப்படுவதும், ஒரு  அந்நிய நாட்டுப் படையெடுப்பைப் போன்ற தோற்றத்தை தருகிறது இது கண்டிக்கதக்கது.

காதர் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி தேசிய தலைவர்):   ரயில்வே அதிகாரிகளை தமிழில் பேச தடை விதிக்கும் தெற்கு ரயில்வேயின் சுற்றறிக்கைக்கு காதர் மொகிதீன் கண்டனம் தெரிவித்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த சுற்றறிக்கை  தமிழ் மொழிக்கு எதிராக மத்திய அரசின் ரயில்வே துறை பிரகடனப்படுத்தியிருக்கிற அதர்ம போர். அவர்கள் ஒருபோதும் இதில் வெற்றி பெற முடியாது. ரயில்வே பணிகளில் வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ள  நிலையில் இந்த சுற்றறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல் அமைந்துள்ளது.Tags : leaders ,party ,Southern Railways , Southern ,Railway banned,speaking ,Tamil,condemned
× RELATED தேசிய மாநாட்டு கட்சி வலியுறுத்தல் அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும்