×

நிலத்தை ஜப்தி செய்யப்போவதாக வங்கி ஊழியர்கள் மிரட்டல் விவசாயி விஷம் குடித்து தற்கொலை: வருசநாடு அருகே சோகம்

வருசநாடு: வருசநாடு அருகே நிலத்தை ஜப்தி செய்யப்போவதாக வங்கி ஊழியர்கள் மிரட்டியதால், விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.தேனி மாவட்டம், வருசநாடு அருகே குமணந்தொழு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்கொடி (56). விவசாயி. இவர் கடந்த 2017ல் தேனியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் 3 ஏக்கர் நில பத்திரத்தை அடமானமாக வைத்து, ரூ.5 லட்சம்  விவசாயக்கடன் பெற்றார். விவசாயம் பொய்த்ததால் தவணை தொகையை முறையாக செலுத்த முடியவில்லை.இதனிடையே கடன் தொகை முழுவதையும் வட்டியோடு சேர்த்து உடனடியாக கட்ட வேண்டும் என, வங்கி ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது வீட்டின் கதவில் நோட்டீஸ் ஒட்டினர்.

மேலும் கடந்த 15 நாட்களுக்கு முன்  குமணந்தொழு பேருந்து நிலையம் அருகே மெடிக்கல் கடைக்கு சென்ற ஜெயக்கொடியை வழிமறித்த வங்கி ஊழியர்கள், ‘‘வாங்கிய கடனை விரைந்து செலுத்த வேண்டும். இல்லையென்றால் நிலத்தை ஜப்தி செய்வோம்’’ என மிரட்டிவிட்டு  சென்றதாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த ஜெயக்கொடி, நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை  உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Bank employees ,land ,Sankam ,Wayanad , Bank employees, confiscate, land, drinking ,poison
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!