×

ரயில்வே உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு: தமிழில் பேச தடை வாபஸ்: திமுக போராட்டத்துக்கு பணிந்தது

சென்னை: தென்னக ரயில்வே அதிகாரிகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில்தான் பேச வேண்டும் என்று போடப்பட்ட உத்தரவை, திமுக போராட்டத்தால், ரயில்வே நிர்வாகம் நேற்று வாபஸ் பெற்றது. மதுரை ரயில்வே கோட்டத்தில் கடந்த மே மாதம் 9ம் தேதி திருமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை பயணிகள் ரயில் கள்ளிக்குடி நோக்கியும், கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் இருந்து மதுரை பயணிகள் ரயில் திருமங்கலம் நோக்கியும் ஒரே நேரத்தில் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் நேர் எதிராக வந்து கொண்டிருந்தது. இதைபார்த்த பொதுமக்கள் அலறிசத்தம் போடவே இரண்டு ரயில் ஓட்டுனர்களும் சுதாரித்துக் கொண்டு உடனடியாக ரயிலை நிறுத்தினர். இதனால் மாபெரும் விபத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பயணிகள் காப்பாற்றப்பட்னர். இதையடுத்து ரயில்வே நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தினர். விசாரணையில் இதற்கு மொழிப் பிரச்சினையே காரணம் என ஆய்வில் கண்டறியப்பட்டதால் நேற்றுமுன்தினம் தென்னக ரயில்வே சார்பில் திடீரென சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது.

அதில், ‘‘கட்டுப்பாட்டு அறைக்கும் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் இடையேயான தொடர்பின் போது தகவல் புரிதல் குழப்பத்தைத் தவிர்க்க, ரயில்வே டிவிஷனல் கட்டுப்பாட்டு அறைக்கும் ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும் இடையேயான தொடர்பு மொழி இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். பிராந்திய மொழிகளில்(தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்) பேசுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் ஸ்டேஷன் மாஸ்டர் தான் சொல்லும் தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு முழுமையாகச் சென்றுவிட்டதா என்பதை உறுதி செய்வது அவருடைய முழு பொறுப்பு ஆகும். இந்த உத்தரவு அமலுக்கு வருவதையடுத்து நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மேற்பார்வை செய்வார்கள்’’ என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு குறித்து செய்திகள் பத்திரிக்கையில் வெளிவந்ததையடுத்து ெபாதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதை தனது முகநூலில் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும்

கண்டனம் தெரிவித்திருந்தனர், இதையடுத்து, திமுக சார்பில் இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்ட்ரல் ரயில்வே பொதுமேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பிற்பகல் 1.15 மணிக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி மற்றும் எம்எல்ஏக்கள் சேகர்பாபு, ரங்கநாதன், ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான திமுக ெதாண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர், தயாநிதிமாறன், ஆர்.எஸ்.பாரதி மற்றும் எம்எல்ஏக்கள் ரயில்வே பொதுமேலாளர் ராகுல்ஜெயினை சந்தித்து சுற்றறிக்கையை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தி கடிதம் அளித்தனர். அப்போது, ரயில்வே வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை தயாநிதி மாறன் படித்து காட்டினார். இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், செல்போனில், பொது மேலாளரிடம் பேசி, ‘உடனடியாக அறிக்கையை வாபஸ் பெற வேண்டும்’ என்றார்.

இதையடுத்து ரயில்வே பொதுமேலாளர், ‘‘கடந்த மாதம் 17ம் தேதி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. தற்போது தெற்கு ரயில்வே தனது அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது. மேலும் புதிய அறிவிப்பாக எந்த மொழியிலும் பேசலாம், குழப்பம் ஏற்படாத வகையில் இருதரப்பும் தங்கள் புரியும் மொழியில் பேசலாம் என தெரிவித்துள்ளது’’ என்றார். இதன் மூலம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே ரயில்வே அதிகாரிகள் பேச வேண்டும் என்கிற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தங்கள் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டதால், ரயில்வே பொதுமேலாளருக்கு தயாநிதிமாறன் உள்ளிட்டவர்கள் நன்றி தெரிவித்தனர். பின்னர் தயாநிதி மாறன் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது: ரயில்வேயில் இந்தியை திணிக்க மறைமுகமாக முயற்சி நடப்பதை அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்களை அழைத்து ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து இதற்கு ஒரு நல்லமுடிவு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி நாங்கள் பொதுமேலாளரை சந்தித்து இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள் என்று கோரிக்கை வைத்தோம். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பொது மேலாளரிடம் பேசி சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யவில்லை என்றால் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் நடத்தலாம் என்று தான் முடிவு செய்து வந்தோம். ஆனால் இந்தி, ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டதாக பொது மேலாளர் தெரிவித்தார். தமிழகத்தில் இந்தியை அனுமதிக்க மாட்டோம் அதற்கு எந்த தியாகத்தையும் செய்ய திமுக தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Tough opposition to Railway order: Banned to speak in Tamil
× RELATED ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார்?.....