கொல்கத்தா அரசு மருத்துவமனையில் தாக்குதல் எதிரொலி: நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்டிரைக்

புதுடெல்லி: கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள்  தாக்கப்பட்டதை கண்டித்தும், பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கக் கோரியும் இளநிலை டாக்டர்கள் தொடங்கிய போராட்டம், நாடு தழுவிய போராட்டமாக மாறியது. இதனால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது கடுமையாக பாதித்துள்ளது.   மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நோயாளி ஒருவர் சமீபத்தில் இறந்தார். இதனால், ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் கடந்த 11ம் தேதி அங்கு பணியில் இருந்த இளநிலை டாக்டர்கள் இருவரை சரமாரியாக தாக்கினர். இதில் டாக்டர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் டாக்டர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி இளநிலை டாக்டர்கள் தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

நேற்று 4வது நாளாக போராட்டம் நீடித்தது. மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு முற்றிலும் பாதிக்கப்பட்டது. சில தனியார் மருத்துவமனைகளும் செயல்படாததால் நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் கடும் அவதி அடைந்தனர். என்ஆர்எஸ் உள்ளிட்ட ஒரு சில மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு மட்டும் செயல்பட்டது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை டாக்டர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், அவ்வாறு பணிக்கு திரும்பாத டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் நேரில் சென்று எச்சரித்தார். இதனால், டாக்டர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. அவருடைய மிரட்டலை நிராகரித்த டாக்டர்கள், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர். இவர்களின் போராட்டம் நேற்று 4வது நாளாக தொடர்ந்தது.

இது தொடர்பாக இளநிலை டாக்டர்கள் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் டாக்டர் அரிந்தம் தத்தா கூறுகையில் `‘எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை முதல்வர் மிரட்டும் தொனியில் எச்சரித்துள்ளார். இதற்காக, முதல்வர் மன்னிப்பு கேட்காவிட்டால் நாங்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்வோம்,’’ என்றார். அதோடு, மாநிலம் முழுவதும் நேற்று வரை மம்தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால், மம்தா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில், இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக நாடு முழுவதிலும் அரசு, தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால், நாடு முழுவதும் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்து வரும் நாட்களில் மருத்துவமனையில் கடும் சேவை பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. தமிழகத்தில் பணியாற்றும் டாக்டர்களும் நேற்று வேலை நிறுத்தம் செய்து போராட்டம் நடத்தினர்.

மருத்துவர்களின் மிக பெரிய சங்கமான இந்திய மருத்துவ கூட்டமைப்பு, 3 நாட்கள் தேசிய அளவிலான போராட்டத்திற்கும் நேற்று அழைப்பு விடுத்தது. அதன்படி, நேற்று தொடங்கி வரும் ஞாயிற்றுக் கிழமை வரை போராட்டம் நடைபெறுகிறது. அப்போது  கருப்பு பட்டை அணிந்து போராட்டம், தர்ணாக்கள் மற்றும் அமைதி பேரணிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இந்த குற்றத்தில் ஈடுபடும் நபர்களை கைது செய்வது, அவர்களுக்கு தண்டனை அளிப்பதை உறுதி செய்வது ஆகியவற்றை போக்சோ சட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், போராட்டத்தை கைவிடுவதற்கு முதல்வர் மம்தாவுக்கு டாக்டர்கள் 6 நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதில், குறிப்பாக தங்களை மிரட்டியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

கவுரவ பிரச்னையாக கருதக்கூடாது  மம்தாவுக்கு மத்திய அமைச்சர் அறிவுரை
மேற்கு வங்கத்தில் நடக்கும் டாக்டர்கள் போராட்டம் குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘டாக்டர்கள் போராட்டத்தை ைகவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். உணர்ச்சிபூர்வமான இந்த பிரச்னையை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கவுரவ பிரச்னையாக நினைக்கக் கூடாது. இது தொடர்பாக அவருக்கு  கடிதம் எழுத உள்ளேன். டாக்டர்கள் தாக்கப்பட்டதால் தான் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என மம்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அந்த பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக அவர் டாக்டர்களை மிரட்டியதால்தான், போராட்டம் தேசிய அளவில் சென்றுள்ளது,’’ என்றார்.

‘வங்கமொழியை பேச வேண்டும்’ மேற்கு வங்க மாநிலம், கஞ்சரப்பாரா பகுதியில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், ‘‘டாக்டர்கள் போராட்டத்தை வெளியில் இருந்து சிலர் தூண்டி விடுகின்றனர். அவர்கள் நேற்று நடைபெற்ற போராட்டத்திலும் பங்கேற்றனர். அப்போது, அவர்கள் எனக்கு எதிராக கோஷமிட்டனர். மேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் வங்க மொழி பேச தெரிந்திருக்க வேண்டும்,’’ என்றார்.

தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
டாக்டர்கள் போராட்டத்தை எதிர்த்து ெகால்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், சுவ்ரா கோஷ் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், ‘இளநிலை டாக்டர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு எதிராக எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்களை சமாதானம் செய்து அவர்களை பணிக்கு திரும்ப செய்து நோயாளிகளுக்கு வழக்கமான சிகிச்சை அளிக்க மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தனர்.

Tags : Kolkata ,Doctors ,country , Kolkata State Hospital, across the country, doctors, strike
× RELATED ‘டாக்டர்கள் இரண்டாவது கடவுள்’...