×

கத்தியால் வெட்டிவிட்டு பெங்களூரில் தலைமறைவு காட்பாடிக்கு திரும்பி வந்த வாலிபர் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து படுகாயம்; 5 பேரிடம் விசாரணை

வேலூர்: காட்பாடி அருகே முன்விரோத தகராறில் வாலிபரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி நடந்துள்ளது. இதுதொடர்பாக 5பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பனமடங்கி அடுத்த பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் வேல்முருகன்(28). இவருக்கும் அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த குள்ளசேகர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் குள்ளசேகர் மற்றும் பள்ளி மாணவன் ஒருவரை வேல்முருகன் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். கடந்த ஓராண்டுக்கு மேலாக பெங்களூரில் தலைமறைவாக இருந்த வேல்முருகன் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வேல்முருகன் ராமாபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். அரசு தொடக்கப்பள்ளி அருகே சென்றபோது குள்ளசேகர், வேல்முருகனை நோக்கி நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் வேல்முருகனின் வலது தோள்பட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பனமடங்கி போலீசார் வழக்குப்பதிந்து 5 பேரை பிடித்து விசாரிக்கின்றனர். தப்பி ஓடிய குள்ளசேகரை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக வாலிபரை சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பரவும் துப்பாக்கி கலாசாரம்
தமிழக- ஆந்திர எல்லை பகுதியான பள்ளத்தூர், ராமாபுரம், கருப்புக்கட்டு, ராஜாதோப்பு, கோட்டைமோட்டூர் போன்ற இடங்களில் நாட்டுத்துப்பாக்கி சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. சுற்றிலும் காடுகள் உள்ளதால் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கும், தற்காப்புக்கும் நாட்டுத்துப்பாக்கிகளை சிலர் பயன்படுத்தி வருகின்றனர். முன்பு பனமடங்கி காவல்நிலையம் அருகே இருந்ததால் போலீசாருக்கு பயந்து காடு மற்றும் நிலங்களில் துப்பாக்கியை பதுக்கி வைப்பார்கள்.
தற்போது 5 கிலோ மீட்டர் தொலைவில் காவல்நிலையம் மாற்றப்பட்டதால், போலீசார் ரோந்து வருவது இல்லை. இதனால் பட்டப்பகலிலும் நாட்டுத்துப்பாக்கிகளுடன் ஊருக்குள் சர்வசாதாரணமாக வலம் வருகின்றனர். போலீசார் மவுனத்தை கலைத்து சோதனை நடத்தி அனுமதியின்றி வைத்திருக்கும் நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : bombing ,Investigation ,Bangalore , Shoot, injure, trial
× RELATED பெங்களூர் ராமேஸ்வரம் உணவக...