நெல்லையில் இருபிரிவினரிடையே மோதல் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலையில் 6 பேர் கைது

நெல்லை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட் வழக்கில்முக்கிய குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை கரையிருப்பு ஆர்.எஸ்.ஏ. நகரைச் சேர்ந்த முருகன் மகன் அசோக் (25). இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளரான இவர் கங்கைகொண்டானில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 12ம் தேதி இரவு பஸ்சிலிருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்ற போது அங்கு மறைந்திருந்த கும்பல், அசோக்கை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து, உடலை ரயில்வே தண்டவாளம் அருகில் வீசி விட்டு தப்பிச் சென்றது. கொலை செய்யப்பட்ட அசோக் கடந்த ஏப்ரல் 27ம் தேதி தனது தாய் ஆவுடையம்மாளுடன் வயலுக்கு சென்றுவிட்டு புல் கட்டுடன் இருசக்கர வாகனத்தில் திரும்பிய போது சிதம்பரம்நகரைச் சேர்ந்த சுந்தரம் மகன் பேச்சிராஜன் மீது இடித்து விட்டது.

 இதனால் ஆத்திரமடைந்த அவர் அசோக்கை தாக்க முயன்றார். தடுக்க முயன்ற ஆவுடையம்மாள் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக பேச்சிராஜன் மீது தீண்டாமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாகவே பேச்சிராஜன் உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து அசோக்கை கொலை செய்துள்ளனர். இதற்கிடையில் அசோக் கொலையில் உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலை கரையிருப்பு அருகே நெல்லை - மதுரை சாலையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், சப் கலெக்டர் மணிஷ் நாரணவரே ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று அசோக்கின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது.  இதற்கிடையில் முக்கிய குற்றவாளியான பேச்சிராஜன் (19), அவரது நண்பர் முத்துப்பாண்டி (27) மற்றும் முருகன் (55), பாலு (48), மூக்கன் (45), கணேசன் (43) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Democrat ,murder ,jail ,conflict , Nellai, Conflict, Democratic Youth Union Executive, 6 people were arrested
× RELATED குஜிலியம்பாறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்