×

தமிழகத்தில் இருமொழி கொள்கை என்பதால் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் சலுகை வழங்க இயலாது: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கோபி: தமிழகத்தில் இருமொழி கொள்கை என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் சலுகை வழங்க இயலாது’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு  மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச  லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று, மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கினார்.  முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: புதிய பாடதிட்டம், மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து தேர்வுக்கும் விடை அளிக்கும் வகையில் உள்ளது. கடந்த ஆண்டு 210 நாட்கள் பள்ளி நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால், காலநிலை மாற்றத்தால் 192 நாட்கள் மட்டுமே பள்ளி திறக்கப்பட்டது. ஆசிரியர் தேர்வில் இருந்த வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டாலும் அவர்கள் மறுதேர்வு எழுத வேண்டும்.  தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 7,500 பேர் அதிகமாக உள்ளனர். அவர்களை மற்ற பள்ளிகளுக்கு மாற்ற ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

 அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு என தனியாக வேலை வாய்ப்பு, உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வில் சலுகை வழங்க முடியாது. அதேபோன்று தமிழகத்தில் இருமொழி கொள்கை என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் சலுகை வழங்க முடியாது. ஸ்மார்ட் கார்டை மாணவர்கள் பஸ் பயணத்திற்கு பயன்படுத்துவது குறித்து, முதலமைச்சரிடம் கலந்தாேலாசித்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கு நன்கொடை வழங்கும் தனி நபர்களுக்கு வரி விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் அனைத்து வகுப்புகளுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கொண்டு வரப்படும். ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் கவனக்குறைவாக இருந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Tags : Chengottai ,Tamilnadu , Tamilnadu, bilingual policy, Minister Chengottiyan
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு