×

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அரசுப்பள்ளியை பூட்டி கிராம மக்கள் போராட்டம்: ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து கோஷம்

காரியாபட்டி: காரியாபட்டி அருகே ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து, அரசுப் பள்ளிக்கு பூட்டுபோட்டு மாணவர்களுடன் சேர்ந்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, சூரனூர் ஊராட்சி தேனூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 7 ஆசிரியர்கள் பணி புரிய வேண்டிய இடத்தில், தலைமையாசிரியர் உட்பட 5 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இதில் ஒரு ஆசிரியை மாற்றுப்பணியில், கடந்தாண்டு முழுவதும் ராஜபாளையத்தில் பணிபுரிந்தார். இந்தாண்டு பள்ளி தொடங்கியதும் பள்ளிக்கு ஒரு நாள் மட்டும் வந்த ஆசிரியை, மீண்டும் மாற்றுப்பணியில் ராஜபாளையம் சென்றதாக கூறப்படுகிறது. ஆசிரியை வந்த நாளில், கிராம மக்கள் மாற்றுப்ப ணி தொடர்பாக அவரிடம் கேட்டபோது, அவர், ‘‘உங்கள் ஊரில் படித்தவர்களை வைத்து பாடம் நடத்தச்  சொல்லுங்கள். அதற்கு நான் சம்பளம் தருகிறேன்’’ என அலட்சியமாக கூறியதாக தெரிகிறது. இதனால் மக்கள் கோபமடைந்தனர். நேற்று காலை கிராம மக்கள், பள்ளி தலைமையாசிரியரிடம் சென்று ஆசிரியையையின் மாற்றுப்பணி குறித்து கேட்டபோது, ‘‘ஆசிரியை மாற்றுப்பணியில் சென்றுவிட்டார்.

நாங்கள் என்ன செய்வது’’ என அவரும் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் அரசு பள்ளியின் கதவுகளை இழுத்து மூடி பூட்டுப்போட்டு, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல், மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுடன் போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த காரியாபட்டி வட்டார கல்வி அலுவலர் ராமலட்சுமி, கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மக்கள் சமாதானம் அடையாமல், ‘‘பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர் வரும் வரை போராடுவோம்’’ என்றனர். இதையடுத்து கல்வி அலுவலர், ‘‘திங்கட்கிழமை பள்ளிக்கு மாற்று ஆசிரியரை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதியளித்தார். இதனையடுத்து பெற்றோர்கள் மாணவ, மாணவர்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.


Tags : struggle ,Bhatti village People ,Kariapatti ,Virudhunagar district , Virudhunagar district, Kariapatti, Government school, villagers, struggle
× RELATED உப்பு சத்தியாகிரக போராட்ட 93ம் ஆண்டு...