×

தமிழகத்திலேயே தமிழில் பேசத் தடையா? தமிழர்களின் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம்: மத்தியஅரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: தமிழர்களின் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை அளித்தது. இந்த அறிக்கைக்கு தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தார். இதனால், இது வரைவு திட்டம்தான். அமல்படுத்த வில்லை என்று மத்திய அரசு விளக்கம் கொடுத்தது.இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் ஆங்கிலம், இந்தி மட்டுமே பேச வேண்டும். பிராந்திய மொழிகளில் பேசக் கூடாது என்று அறிவித்தது.

இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் மற்றும் நிலைய அலுவலர்கள் பேசும்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும், தமிழில் பேசக் கூடாது. என்று தமிழகத்திலேயே தமிழில் பேசத் தடை விதித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஆணவமாகவும் அடாவடித்தனமாகவும்  சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். தமிழ்நாட்டில் தமிழ் பேசக்கூடாது,  இந்தி பேசு என்பது மொழித்திணிப்பு மட்டுமல்ல மொழி மேலாதிக்கம்,  மொழி அழிப்பு. மேலும், மேலும் தமிழர்களின் உணர்வுகளுடன்  விளையாடி வருகிறார்கள், சீண்டிப் பார்க்கிறார்கள். இதுபோன்ற சில்லரைத்தனமான உத்தரவுகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil ,Tamils ,government ,MK Stalin , Tamil Nadu, Tamil, central, MK Stalin
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!