×

தமிழக புதிய தலைமைச் செயலாளர், டிஜிபி யார்? அதிகாரிகளிடையே கடும் போட்டியால் பரபரப்பு

சென்னை: தமிழகத்தில் தலைமைச் செயலாளர், டிஜிபி பதவி காலியாவதால், அந்த பதவிகளைப் பிடிக்க உயர் அதிகாரிகளுக்கிடையே கடுமையான போட்டி எழுந்துள்ளது. திரைமறைவில் நடக்கும் சந்திப்புகளால் தினமும் ஒரு புரளி கிளம்பி பரபரப்பை கூட்டியுள்ளது. தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருப்பவர் கிரிஜா வைத்தியநாதன். இவர், இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார்.புதிய தலைமைச் செயலாளரை நியமிக்க மத்திய அரசின் அனுமதி தேவை. இதனால் மத்திய அரசின் அனுமதிக்காக 3 பேர் கொண்ட பட்டியலை தயாரித்து அனுப்ப வேண்டும். மத்திய அரசு 3 பேருக்கும் அனுமதி அளித்தவுடன், அந்த 3 பேரில் இருந்து ஒருவரை தலைமைச் செயலாளராக தமிழக அரசு நியமிக்கும்.தமிழகத்தில் தலைமைச் செயலாளர் பதவியைப் பிடிக்க தற்போதைய நிதித்துறை செயலாளர் சண்முகம், கவர்னரின் செயலாளர் ராஜகோபால், ஜிஎஸ்டி சிறப்பு செயலாளர் (மத்திய அரசுப் பணி) ராஜீவ் ரஞ்சன், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோரிடையே கடும் போட்டி எழுந்துள்ளது.

அதில், நிதித்துறை செயலாளர் சண்முகம், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மூலம் அமைச்சர் வேலுமணி ஆதரவைப் பெற்றுள்ளார். முதல்வர் எடப்பாடியும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, கவர்னரின் செயலாளர் ராஜகோபால், கவர்னரின் உதவியுடன் தலைமைச் செயலாளர் பதவிக்கு முயன்றுள்ளார். கவர்னர், இதுவரை 3 முறை எடப்பாடி பழனிசாமியிடம், ராஜகோபாலுக்காக பேசியுள்ளார். நாக்பூரில்ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை பிடித்து, நிதின் கட்கரி உதவியை நாடியுள்ளார்.  இதைத் தவிர பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு உயர் அதிகாரியின் உதவியையும் நாடியுள்ளார். அவரும் முதல்வர் எடப்பாடியிடம் பேசியுள்ளார். ஆனால் ராஜகோபாலுக்காக பேசியவர்களிடம், தலைமைச் செயலாளர் பதவிக்கு அவரை நியமிப்பது கடினம் என்று தெரிவித்துள்ளார். அதேபோல, ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, அந்த துறையின் அமைச்சர் வேலுமணி மூலம், அந்தப் பதவியைப் பிடிக்க தீவிரமாக முயன்று வருகிறார். இவர் வணிக வரித்துறை செயலாளர் மற்றும் பத்திரப்பதிவு துறை ஐஜியாக இருந்தபோது சில குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால் அவரை நியமிக்கக் கூடாது என்று முதல்வரிடம் புகார் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவருக்கு வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது. மத்திய அரசின்  ஜிஎஸ்டி கவுன்சிலில் பணியாற்றும் ராஜீவ் ரஞ்சன், தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை செயலாளராக பணியாற்றி வந்தார். அப்போது அமைச்சராக இருந்த எடப்பாடியுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். தற்போது எடப்பாடியே முதல்வராக இருப்பதால், அவரிடமே தனக்கு தலைமைச் செயலாளர் பதவி வழங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி சண்முகத்துக்கும் ராஜகோபாலுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதேபோல சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு திரிபாதி, ஜாபர்சேட், அசுதோஷ் சுக்லா, லட்சுமி பிரசாத் ஆகியோர் தகுதியானவர்களாக உள்ளனர். அதில் திரிபாதி சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் டிஜிபியாக உள்ளார். இவர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இதனால் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நேரடியாக அறிமுகம் உள்ளவர். எனவே, திரிபாதிக்காக நவீன் பட்நாயக், எடப்பாடியிடம் பேசியுள்ளார். அதைத் தவிர பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக உள்ள பி.கே.சர்மா என்ற சீனியர் ஐஏஎஸ் அதிகாரியும், திரிபாதிக்காக எடப்பாடி பழனிசாமியிடம் பேசியுள்ளார். ஆனால், இவர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்தபோதுதான், அதிமுக 2 ஆக உடைந்தது. சசிகலாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது, முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, அப்போது வடக்கு மண்டல ஐஜி செந்தாமரைக்கண்ணன், காஞ்சிபுரம் எஸ்பியாக இருந்த முத்தரசி ஆகியோரை கூவத்தூருக்கு அனுப்பி வைத்தார். இதனால் அங்கு பிரச்னை ஏற்பட்டது. அப்போதுதான் கோவை எம்எல்ஏ அருண்குமார், கூவத்தூரில் இருந்து தப்பி வெளியில் வந்தார். இதனால், எடப்பாடி முதல்வரான பிறகு திரிபாதி மாற்றப்பட்டார். அவர் மீது எடப்பாடி பழனிசாமிக்கு திருப்தியில்லை என்று கூறப்படுகிறது.

அடுத்ததாக சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் உள்ளார். இவர் மீது 2011ம் ஆண்டு அரசு ஒதுக்கிய நிலம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. ஆனால் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் தற்போது அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை.  தகுதியானவர்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளார். அசுதோஷ் சுக்லா, தேர்தல் டிஜிபியாக இருந்தவர். நேர்மையானவர். ஆனால் ஆளும் கட்சிக்கு எதிராக தேர்தல் நேரத்தில் செயல்பட்டதாக கூறி, அவரை மண்டபத்துக்கு தூக்கியடித்து விட்டனர். இதனால் அவருக்கும் வாய்ப்புகள் இல்லை என்று தெரிகிறது. கடைசியாக, லட்சுமி பிரசாத் உள்ளார்.

இவர், தலைமையிட ஏடிஜிபியாக இருந்தபோது,  நேர்மையாக செயல்படுகிறவர் என்ற பெயரில் நேர்மையான அதிகாரிகளுக்கு கூட நெருக்கடி கொடுத்தவர் என்று குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும், இவர் பல வருடங்கள் சட்டம் ஒழுங்கு பதவியில் பணியாற்றியவர் இல்லை. ஆனாலும் இவரது பெயர் பட்டியலில் உள்ளது. தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் பட்டியலை மத்திய அரசு பரிசீலித்து அங்கீகரிக்கும். அதன்பின்னர், தமிழக அரசு அந்தப் பட்டியலில் இருந்து ஒருவரை தலைமைச் செயலாளராகவும், டிஜிபியாகவும் தேர்வு செய்து அறிவிக்கும்.

Tags : Chief Secretary ,Tamil Nadu , Tamil Nadu Chief Secretary, DGP
× RELATED தடையின்றி குடிநீர் விநியோகம், கோடைகால...