மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழிசை செல்போன் திருட்டு

சென்னை: சென்னையில் நடந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் நிகழ்ச்சியில், கலந்துகொண்ட தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் செல்போனை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மத்திய உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னை வந்தார்.  எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜவினர் பலர் கலந்து கொண்டனர்.  செய்தியாளர் சந்திப்பு நடந்துகொண்டிருக்கும்போதே மேஜையில் வைத்திருந்த தமிழிசையின் செல்போன் மாயமானது.

அதிர்ச்சியடைந்த தமிழிசை நிகழ்ச்சி நடந்த அறை முழுவதும் தேடினார். கிடைக்கவில்லை. உடனே இதுகுறித்து பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் தமிழிசை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நிகழ்ச்சி நடந்த அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று செல்போன் திருடிய நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு  ஏற்பட்டது.

Tags : Tamil Nadu ,Chief Minister , Federal Minister occasion, Tamilisai, cell phone theft
× RELATED தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்...