இன்று நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி டெல்லி சென்றார்: பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவும் திட்டம்

சென்னை: டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியை இன்று தனியாக சந்தித்து பேசவும், அப்போது தமிழக திட்டங்கள் மற்றும் அதற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கவும் திட்டமிட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் இன்று பிற்பகல் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடக்கிறது. இதில், பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 5.10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லி சென்ற முதல்வரை தமிழக அதிமுக எம்பிக்கள் வரவேற்றனர். பின்னர் அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார்.

முதல்வரை தொடர்ந்து, தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலாளர் சண்முகம் மற்றும் முக்கிய அதிகாரிகள் நேற்று இரவு டெல்லி சென்றனர். அவர்களும், இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பார்கள். டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட சிலரை சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளார். அதன்படி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று காலை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியை, விழா நடைபெறும் ஜனாதிபதி மாளிகை கூட்ட அரங்கில் சந்திப்பாரா அல்லது தனியாக சந்தித்து பேசுவாரா என்பது இன்று மாலைதான் தெரியவரும்.

பிரதமர் மோடியை சந்திக்கும்போது, தமிழகத்தின் பல்வேறு மக்கள் திட்டங்களுக்கு நிதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்த முதல்வர் எடப்பாடி திட்டமிட்டுள்ளார். அதன்படி, தமிழக நதிநீர் இணைப்பு திட்டம், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியையொட்டி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிதி தேவைகள்,

8 வழிச்சாலை திட்டம், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நடைபெற உள்ள 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், பல்வேறு மேம்பால பணிகளுக்கான கூடுதல் நிதி, மத்திய அரசு சார்பில் நடைபெறும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி, நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி, தமிழக மீனவர்கள் விவகாரம், எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் புதிய மருத்துவ கல்லூரி, ஏற்கனவே தமிழக அரசுக்கு மத்திய அரசு தர வேண்டியுள்ள நிதிகள், தமிழகத்துக்கு தர வேண்டிய புயல் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் அதற்கான நிதிகளை வலியுறுத்தி 100க்கும் அதிகமான பக்கங்களை கொண்ட மனுவை பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி வழங்க திட்டமிட்டுள்ளார். அதேபோன்று பாஜ தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்திக்கும்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை குறித்து எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அடுத்து, மாநிலங்களவையில் 3 இடங்கள் அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

அதில் ஒன்றை பாஜகவுக்கு தர வேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்துவார் என்றும் கூறப்படுகிறது. அதேபோன்று, மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளார். மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு ேதசிய நெடுஞ்சாலை, மேம்பால திட்டங்களை விரைவாக நிறைவேற்றுங்கள் என்று கோரிக்கை வைக்கவும் முதல்வர் எடப்பாடி திட்டமிட்டுள்ளார். திட்டமிட்டபடி டெல்லியில் அனைத்து தலைவர்களையும் இன்று சந்தித்து விட்டால் முதல்வர் எடப்பாடி இன்று இரவே டெல்லியில் இருந்து சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார். இல்லையென்றால், ஒருநாள் அங்கு தங்கி, நாளை சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

Related Stories:

>