×

கட்டாய கல்வி உரிமை சட்டவிதிகளை மீறி ஆசிரியர்-மாணவர் விகிதம் மாற்றம்: கற்றல், கற்பித்தல் பாதிக்கும்,.. ஆசிரியர்கள் எதிர்ப்பு

சென்னை: மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளை மீறி, ஒரு ஆசிரியருக்கு 60 மாணவர்கள் என மேனிலை வகுப்புகளுக்கு  நிர்ணயம் செய்தால், அது கற்றல், கற்பித்தல் பணிகளை பாதிக்கும் என்று ஆசிரியர்கள் எதிரப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் பல்வேறு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் கூறப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள போட்டித் தேர்வை மட்டும் தமிழக அரசு கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளது. ஆனால், மற்ற பல விதிகளை கடைபிடிப்பதில் மெத்தனமாக உள்ளது. இப்படி பல்வேறு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறையில் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். இதனால் கல்வியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ஒரு ஆசிரியருக்கு 60 மாணவர்கள் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது ஆசிரியர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் கூறியுள்ளதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ஒரு ஆசிரியருக்கு 60 மாணவர்கள் என்று அறிவித்து இருப்பது மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிக்கும். தற்போது புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு அதை கற்பிப்பதில் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். அதேநேரத்தில் அந்த புதிய பாடத்திட்டத்தை படிக்கும் மாணவர்களுக்கு கற்றல் சூழலும் திருப்தியாக இருக்காது. ஆனால், ஆசிரியர்-மாணவர் விகிதம்  1 முதல் 5ம் வகுப்புவரை ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள், நடுநிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை  ஒரு ஆசிரியருக்கு 35 மாணவர்கள், உயர்நிலைப் பள்ளிகளில் 8 முதல் 10ம் வகுப்பு வரை ஒரு ஆசிரியருக்கு 40 மாணவர்கள், மேனிலை வகுப்புகளான பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியருக்கு 60 என்று நிர்ணயம் செய்து இருப்பது கற்பித்தல், கற்றல் பணியில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு வகுப்பில் 60 மாணவர்கள் என்பது மனஉளைச்சலை ஏற்படுத்தும்.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் இதுபோல கூறப்படவில்லை. ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள் என்ற விகிதாச்சாரம்தான் கூறப்பட்டுள்ளது. அப்படி அமைந்தால்தான் மாணவர்கள் நன்றாக கற்க முடியும். ஆசிரியர்களும் மாணவர்களின் மீது தனிக் கவனம் செலுத்தி கற்பிக்க முடியும். இதுதான் கல்வியில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பதை காரணம் காட்டி இப்படி செய்வது மாணவர்கள் நலனை பாதிக்கும். எனவே, ஆசிரியர் -மாணவர் விகிதாச்சாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அக்கறை காட்டி, 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆசிரியர்களை நசுக்குவதில் கவனம்
மேனிலை வகுப்புகளில் ஆசிரியர் -மாணவர் விகிதாச்சாரத்தை குறைக்க பள்ளிக் கல்வித்துறை மறுத்து வருகிறது. இது ஆசிரியர்கள் மீது பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு இருக்கும் கோபத்தை காட்டுவதாக இருக்கிறது. ஆசிரியர்களை பழிவாங்க வேண்டும் என்று பல்வேறு கெடுபிடிகளை காட்டுகிறது. இதற்கு பின்னணியில் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. ஆசிரியர்களை நசுக்குவதில் அதிக கவனம் செலுத்தும் இந்த அரசு கல்வியில் முன்னேற்றத்தை கூட்டவும், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அரசு இதை கவனத்தில் கொள்ளுமா?

Tags : Teacher-student ratio change , Compulsory Education Right Laws, Author, Hon
× RELATED கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து...