×

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி மரணம்: மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

விழுப்புரம்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி நேற்று மரணமடைந்தார். அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி (69), கடந்த ஓராண்டாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று அதிகாலை 4 மணியளவில் ராதாமணி உயிரிழந்தார். தகவலறிந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கே வந்து அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் அவரது உடல் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே கலிஞ்சிக்குப்பத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.  
ராதாமணி எம்.எல்.ஏ, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைபட்டம் படிக்கும்போதே திமுக மாணவர் இயக்கத்தில் சேர்ந்து, கட்சி பணியாற்றி வந்தார். பின்னர் கண்டமங்கலம் ஒன்றிய செயலாளராக 33 ஆண்டுகள் இருந்துள்ளார். தற்போது மாவட்ட அவைத்தலைவர் பதவியில் இருந்த அவர், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு பெற்று வெற்றி பெற்றார். ராதாமணி திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு 2 சகோதரிகள், ஒரு சகோதரர் உள்ளனர்.

ராதாமணி மறைவு திமுகவுக்கு பேரிழப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், ‘விக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி மறைவு மிகமிக அதிர்ச்சி தரக்கூடியது. அவரது மறைவு திமுகவுக்கு பேரிழப்பு. திமுக வளர்ச்சிப் பணிகளில் நாளெல்லாம் பம்பரம் போல் பணியாற்றிய அவர், அறிவிக்கப்பட்ட போராட்டங்களில் அறைகூவல் விடுத்துப் பங்கேற்றவர். தொகுதி வளர்ச்சித் திட்டங்களுக்காக சட்டமன்றத்தில் துணிச்சலாகவும், உறுதியாகவும் ஓங்கிக் குரல் கொடுக்கும் அவர், கலைஞரின் பாராட்டுதலைப் பெற்றவர். என் மீதும் தனிப்பட்ட பாசம் வைத்திருந்தவர் என்று தெரிவித்துள்ளார்.

 திமுக முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியன் மரணம்

திமுக முன்னாள் எம்.பி.  சிவசுப்பிரமணியன் (81). அரியலூர் மாவட்டம்  ஆண்டிமடம் அருகே    தேவனூர் கிராமத்தை சேர்ந்த இவருக்கு சிவராஜேஷ்வரி என்ற மனைவியும்,  சிவசங்கர் (அரியலூர் மாவட்ட திமுக செயலாளர்), சிவகுமார் என இரு மகன்களும்  உள்ளனர்.  கடந்த 2 ஆண்டுகளாக  உடல்நலக்குறைவால்  பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தார்.   நேற்று காலை 8 மணியளவில்  உடல் நிலை மோசமானதால் அரியலூரில்  உள்ள தனியார்  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்  இறந்தார்.  இதையடுத்து  அவரது உடல்  ஆண்டிமடம் முஷ்ணம்  சாலையில் உள்ள  இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு  பொதுமக்கள் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ளது. இன்று கால இறுதி சடங்கு நடக்கிறது. சிவசுப்பிரமணியன், 1989 முதல் 1996 வரை ஆண்டிமடம் தொகுதி எம்எல்ஏவாகவும், 1998ல் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். இவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து நேற்று மாலை அங்கு நேரில் சென்று மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

Tags : MLA ,death ,Vikramvandi Block DMK ,Radhamani ,MK Stalin , Vikramwandi Block, DMK MLA, Radhamani, Death, MK Stalin, Tribute
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...