×

நாகர்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகள் கலெக்டர் ஆபீஸ் முன்பு டிரான்ஸ்பார்மர் அகற்றப்படுமா?

நாகர்கோவில் : நாகர்கோவில் நகரின் வளர்ச்சிக்கு ஏற்றால் போல் சாலை வசதிகள் இல்லை. நகர பகுதியை சுற்றி உள்ள சாதாரண சந்துகள் தொடங்கி முக்கிய சாலைகள் வரை அனைத்துமே மிக குறுகலாகத்தான் உள்ளது. புறம் போக்கு நிலங்கள் ஆக்ரமிக்கப்பட்டு உள்ளதே இதற்கு காரணம். ஆக்ரமிப்புகளை அகற்கும் விவகாரத்தில் அதிகாரிகள் அவ்வளவாக கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. ஒருவித மெத்தன போக்கையே கடைபிடிக்கின்றனர். ஆக்ரமிப்புகளை அகற்றி சாலைகளை விரிவாக்கம் செய்தால், பொது மக்கள், வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். நகர பகுதியில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதுதான் பாதசாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. காலம் காலமாக இந்த கோரிக்கை கடலில் கரைத்த பெருங்காயம் போலவே உள்ளது.

பொது மக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கைக்கு இதுவரையிலும் விடைகிடைக்கவில்லை. இன்னும் கிடைக்குமா? என்பதும் கேள்வி குறிதான். காரணம் கடைமையை சரி வர செய்ய முன் வராத அரசு அதிகாரிகள் தான். நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்ந்துவிட்டது. ஆனால் நகராட்சியாக இருந்த போது இருந்த அதே நிலைதான் நீடிக்கிறது. இதனால் யாருக்கு என்ன பலன். அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு வந்து விடும். அதே வேளையில் வரி விகிதங்கள், குடிநீர் உள்பட மாநகராட்சி வசூலிக்கும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துவிடுகிறது. இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். இதை மனதில் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் குறைந்த பட்சம் சாலை வசதிகளையாவது மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து இருக்கிறது.

ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட கட்டாயபடுத்துகிறது தமிழக அரசு. போலீசாரும் முக்குக்கு முக்கு நின்று கொண்டு மடக்கி பிடிக்கின்றனர். ஆனால் எந்த ரோடாவது சரியாக இருக்கிறதா? ஒரு மழைக்கே ரோடு தாங்கவில்லை. இது யார் குற்றம் என்றால் விடை கிடைக்காது. ஏன் இந்த ஓர வஞ்சனை என்பதுதான் குமரி மாவட்ட பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. இனியாவது அதிகாரிகள் தங்களது பொறுப்பை உணர்ந்தால் சரி...

டிரான்ஸ்பார்மர் அகற்றப்படுமா?

நாகர்கோவில் நகரில் 24 மணிநேரமும் பரபரப்புடன் காணப்படுவது கலெக்டர் அலுவலகம். இதன் அருகில் ஏற்கனவே டிராபிக் ஜாம் என்பது மிக அதிகம். இதில் சிக்கி வாகனங்கள் தவிக்கின்றன. இந்த நேரத்தில் கலெக்டர் அலுவலகத்தை ஒட்டியே டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இதுவும் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. இந்த டிரான்ஸ் பார்மரை உடனடியாக அகற்ற வேண்டும். அதை வேறு இடத்துக்கு மாற்றுவதன் மூலம் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைவார்கள். இது விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டுநர்களின் கோரிக்கை. குறைந்த பட்சமான இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags : tunneling roads ,Nagercoil ,Collector ,office ,Transformer , Will the tunneling roads , Nagercoil , Collector's office , Transformer?
× RELATED நாகர்கோவில் மருத்துவமனையில்...