தீவிரவாதத்திற்கு எதிராக பொறுப்புடன் செயல்பட வேண்டும் : ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி வேண்டுகோள்

பிஷ்கெக்: தீவிரவாதத்திற்கு எதிராக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு, கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று தொடங்கியது. மாநாடு இன்றும் நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, நேற்று பிஷ்கெக் சென்றார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பல நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி முதல் முறையாக பங்கேற்கிறார். உறுப்பு நாடுகளை தவிர்த்து ஆப்கானிஸ்தான்,ஈரான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, குறுகிய எல்லைகளை கடந்து தீவிரவாதத்திற்கு எதிராக அனைவரும் என்று இணைய வேண்டும் என்று பாகிஸ்தானை சூசகமாக எச்சரித்தார்.மேலும் பொருளாதார வளர்ச்சி காண, அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று தெரிவித்த மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுடன் வர்த்தக உறவு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,  பருவநிலை மாற்றத்தை சரியாக கையாளுவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் மாற்று எரிபொருளை கண்டறிவதில் இந்தியா தீவிரமாக உள்ளது என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.மேலும் இலங்கையில் குண்டுவெடிப்பு நடைபெற்ற தேவாலயத்தை பார்வையிட்ட போது தீவிரவாதத்தின் கோர முகத்தை பார்த்தேன் என்று கூறிய மோடி, தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, இணைந்து செயல்பட மனிதாபிமான சக்திகள் முன்வர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் விருந்தின் போது பரஸ்பரம் காலம் விசாரித்து பேசி கொண்டு இருந்தனர். ஆனால் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானிடம் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரிக்கவில்லை.முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதினை மோடி தனியாக சந்தித்து பேசினார்.  


Tags : Narendra Modi ,Shanghai Cooperation Conference , Kyrgyzstan, Prime Minister Modi, Shanghai, Cooperation
× RELATED வடகிழக்கு டெல்லியில் இயல்புநிலை...