×

பெருந்துறை ரோட்டில் இருந்து திண்டல் வரை ரூ.300 கோடியில் மேம்பாலம்

* தொழில்நுட்ப குழுவுக்கு அறிக்கை அனுப்ப நடவடிக்கை

ஈரோடு :  ஈரோட்டில் இருந்து திண்டல் வரை 5.4 கி.மீட்டருக்கு ரூ.300 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்கான மண் ஆய்வுகள் செய்யும் பணி முடிந்த நிலையில் தொழில்நுட்ப அங்கீகார குழுவிற்கு அறிக்கை அனுப்பும் பணி நடந்து வருகிறது.  ஈரோடு மாநகரில் நாளுக்குநாள் பெருகிவரும் வாகன எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை சரிசெய்யும் வகையில் அரசு மருத்துவமனை பகுதியில் ரூ.54 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், மேம்பாலத்தில் ஒரு பஸ்கள் கூட செல்லவில்லை. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. தற்போது கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை மேட்டூர் ரோட்டிலும், பெருந்துறை ரோட்டிலும் விரிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.  பெருந்துறை ரோட்டில் மேம்பாலத்தை விரிவுபடுத்தினால் பெருந்துறை, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பஸ்கள், வாகனங்கள் எளிதில் செல்ல முடியும்.

இந்த கோரிக்கையை ஏற்று பெருந்துறை ரோட்டில் காலிங்கராயன் இல்லத்தில் இருந்து திண்டல் வித்யா நகர் மேடு வரை 5.4 கி.மீட்டருக்கு 300 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து மண்ணின் தன்மையை ஆய்வு செய்வதற்கும், மேம்பாலம் கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கவும் முதல்கட்டமாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மேம்பாலம் கட்டுமான பணிகளுக்காக பெருந்துறை ரோட்டில் 112 இடங்களில் மண்ணின் தன்மை பரிசோதிக்கப்பட்டது. காலிங்கராயன் இல்லத்தில் இருந்து திண்டல் வரை 50 மீட்டருக்கு ஒரு இடம் வீதம் தேர்வு செய்யப்பட்டு மண் பரிசோதனை செய்யப்பட்டது. மேம்பாலம் கட்டுமான பணியின்போது பில்லர் அமைய உள்ள இடங்கள் பாதுகாப்பானதாக உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மண்ணின் தன்மை, மேம்பாலம் அமையவுள்ள பகுதிகள் குறித்து அனைத்து ஆய்வுகளும் முடிந்த நிலையில் அனுமதிக்காக தொழில்நுட்ப அங்கீகார குழுவிற்கு அறிக்கை அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு அனுமதி பெற்ற பிறகு கட்டுமான பணிகளுக்காக எவ்வளவு செலவாகும் என்பது முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீட்டிற்காக அனுப்பி வைக்கப்படும். நிதியை பெற்ற பிறகு பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பெருந்துறை ரோட்டில் காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து திண்டல் வித்யாநகர் வரை மேம்பாலத்தை விரிவுப்படுத்த சுமார் 300 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள மேம்பாலம் 11 மீட்டர் அகலத்தில் இருக்கும். மின்விளக்குகளும், தண்ணீரை வெளியேற்றும் வசதிகளும் இருக்கும். தற்போது மண் ஆய்வு செய்யப்பட்டு இதற்கான அறிக்கை தொழில்நுட்ப அங்கீகார குழுவிற்கு அனுப்ப உள்ளோம். நிதி பெற்ற பிறகு டெண்டர் விடப்படும். இதற்கு எப்படியும் 6 மாதம் ஆகும். அதன்பின்,  அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கும்.இவ்வாறு அவர்கள்  கூறினர்.

Tags : Perundurai Road ,Thindal , New Bridge,Perumthurai ,Tindal , erode
× RELATED திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா