×

நெல்லை நரிக்குறவர் காலனி கோயிலில் 40 எருமை, 75 ஆடுகள் பலியிட்டு நூதன திருவிழா

* சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரத்தம் குடித்தனர்

பேட்டை : நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனி கோயில் கொடை விழாவில் மதுரை மீனாட்சியம்மன், பத்ரகாளிக்கு 40 எருமை, 75 ஆடுகளை பலியிட்டு வழிபடும் நூதன திருவிழா நடந்தது. இதில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரத்தம் குடித்தது அனைவரையும் மெய்சிலிர்க்க செய்தது. நெல்லையை அடுத்த பேட்டை நரிக்குறவர் காலனியில், சுமார் 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். வேட்டையாடுதல், ஊசி, மணி, பாசி வியாபாரத்தை தொழிலாக கொண்ட இவர்கள், காலனியின் மேற்கு பகுதியில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தனித்தனியே குடில் அமைத்து சுடலைமாட சுவாமி, மதுரை மீனாட்சி அம்மன், பத்ரகாளி உள்ளிட்ட தெய்வங்களுக்கு குலவழக்கப்படி எருமையும், வெள்ளாடும் பலி கொடுத்து கொடை நடத்துவது வழக்கம். இதற்காக 90 நாட்கள் அசைவ உணவுகளை தவிர்த்து கடும் விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

alignment=


இந்தாண்டுக்கான திருவிழா, கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி சங்கரன்கோவில், சுரண்டை, தென்காசி, வள்ளியூர், சிவகங்கை, பல்லடம், பொள்ளாச்சி, தெற்கு வாகைகுளம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் குழுக்களாக குடியிருக்கும் நரிக்குறவ சமூகத்தினர் குடும்பம், குடும்பமாக திரண்டு சொந்த ஊரான பேட்டையில் குவிந்தனர். நேற்று முன்தினம் மாலை சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி, சுடலைமாட சுவாமிக்கு நேர்த்திக்கடனாக 75 ஆடுகள் பலியிடப்பட்டது. அவற்றின் ரத்தத்தால் சுடலையின் விக்ரகத்துக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து குடும்பத்தினர், ஆட்டின் ரத்தத்தை குடித்து விரதத்தை முடித்தனர். பின்னர் பொங்கலிட்டு படைக்கப்பட்டது. இரவு முழுவதும் பல்வேறு வகையான பலகாரங்கள் சுவாமிக்கு படைக்கப்பட்டன. இதையடுத்து எருமை கொம்புகளில் தீப்பந்தம் ஏற்றும் நிகழ்ச்சி, கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு சேர்ந்த கலவையை தாம்பூலத்தில் வைத்து 7 முறை எருமையை வலம் வந்து அதன் முதுகில் பூசி கையால் தாக்கும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து எருமை முகத்தில் தண்ணீர் ஊற்றி, சீறும்போது முதுகு பகுதியில் சூலாயுதத்தால் குத்தி வதம் செய்தனர். இரவு முழுவதும் நரிக்குறவர்களின் ஆடல், பாடல்கள் களைகட்டின. முன்னதாக குலதெய்வங்களுக்கு மாவிளக்கேற்றி வழிபாடு நடத்தினர். நேற்று காலை இஷ்டதெய்வங்களை வழிபட்டு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விரதமிருந்த ஏராளமானோர் பூக்குழி இறங்கினர். பின்னர் பத்ரகாளிக்கு 40 எருமைகளும், மதுரை மீனாட்சி அம்மனுக்கு 75 ஆடுகளும் கழுத்தில் குத்தி பலி கொடுக்கப்பட்டன. அப்போது பீறிட்ட ரத்தத்தை குடில்களின் வாசல் முன் தோண்டப்பட்ட குழிக்குள் இட்டனர்.

alignment=


குலதெய்வங்களின் உருவங்களை ரத்தத்தில் அபிஷேகம் செய்த பிறகு எருமை, ஆடுகளின் கழுத்தில் இருந்து சிறியோர் முதல் பெரியோர் வரை ரத்தம் குடித்தனர். சிறுகுழந்தைகள் ரத்தத்தை குடித்தால் தைரியமாக வளரும் என்பது அவர்களின் நம்பிக்கை. இது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இன்று (14ம் தேதி) காலை விரதமிருந்தவர்கள், குளித்த பிறகு உணவு சாப்பிடும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு பெண்கள் தாம்பூலத்தில் எருமை தலை மற்றும் ரத்தம் தோய்ந்த மணலை தலையில் ஏந்தியபடி காலனியின் வெளிப்பகுதியில் கொண்டு வந்து கொட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு பேய் கொடையும், தொடர்ந்து ரொட்டி சுட்டு தேவதைகளுக்கு வீசும் நிகழ்வும்
நடைபெறுகிறது.

மழைவளம் கொடுக்கும்

இந்த வழிபாடுகள் குறித்து நரிக்குறவர்கள் கூறுகையில், எங்களில் 12 பிரிவினர் உள்ளனர். இந்த வழிபாடு முறை என்பது எங்களின் பாரம்பரியத்தை பறை சாற்றும் வகையில் உள்ளது. முற்காலத்தில் வனப்பகுதியில் வசித்த எங்களின் குலத்தொழில் வேட்டையாடுதல்தான். காடுகளுக்குள் செல்லும் நாங்கள் கடவுளின் ஆசியால்தான் விலங்குகளை வேட்டையாடி பத்திரமாக திரும்புகிறோம். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக எங்களின் குலதெய்வங்களான மீனாட்சி, பத்ரகாளி, சுடலைமாட சுவாமிக்கு கொடை விழா நடத்தி கொண்டாடுகிறோம். இந்த வழிபாட்டின் மூலம் திருப்தியடையும் தெய்வங்கள் நல்ல மழைவளம் கொடுப்பதோடு, நோயில்லா வாழ்வு, நீடித்த செல்வத்தை தரும் என நம்புகிறோம். இந்த விழாவிற்காக தமிழகத்தின் எந்த பகுதியில் வசித்தாலும் நாங்கள் இங்கு ஒன்று கூடி விடுவோம் என்றனர்.

5 ஆண்டிற்கு பின்

நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியில் ஆண்டுதோறும் இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக போதியளவு வருமானம் இல்லாததால் இந்த விழா நடைபெறவில்லை. அதன் பின்னர் இந்த ஆண்டுதான் வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்காக ஒவ்வொரு குடும்பத்தினரும் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ளனர்.

எருமை பலி ஏன்?

இந்த விழாவில் எருமையை சூலத்தால் தாக்கி கொல்வதிலும் ஒரு வரலாற்று கதை பொதிந்துள்ளது. வனப்பகுதியில் ஒரு அசுரன் காட்டெருமை வேடத்தில் வந்து எங்களை துன்புறுத்தினான். இதுகுறித்து குலதெய்வத்திடம் முறையிட்டோம். இதையடுத்து பத்ரகாளி அந்த அசுரனை வேட்டையாடி அதன் ரத்தத்தை குடித்து எங்களை பாதுகாத்தார். அதை போற்றும் வகையிலேயே எருமை பலி கொடுத்து ரத்தம் குடிக்கப்படுகிறது. முற்காலத்தில் இருந்ததை விட தற்போது குறைந்தளவு உயிர்களையே பலியிடுவதாகவும் இயற்கையை ஒட்டி வாழ்ந்த தங்களின் வாழ்க்கை முறையை தற்போதைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே விழாவை பழைய முறையில் கொண்டாடுவதாகவும் நரிக்குறவர்கள் பெருமையுடன் தெரிவித்தனர்.

Tags : Nellai Narikuravu ,colony temple ,nutana festival , Tirunelveli ,Colony Temple,Buffalo,Goats ,festival
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை