×

நெல்லை மாநகராட்சி ஆம்னி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் அமைக்கும் பணி தீவிரம்

நெல்லை : நெல்லை மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்ட ஆம்னி பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட நெடுந்தூரங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆம்னி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல புதிய பஸ்நிலையம் பகுதியில் இடம் ஒதுக்கப்படாத நிலையில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் பகுதியில் ஆம்னி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல மாநகராட்சி அனுமதியளித்திருந்தது.

இதன்படி மாலை முதல் அதிகாலை வரை ஆம்னி பஸ்கள் சந்திப்பு பஸ் நிலையம் பகுதியில் பயணிகளை ஏற்றி இறக்கிச் சென்றன. இருந்த போதும் சந்திப்பு இந்நிலையில் நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.79 கோடி செலவில் நெல்லை சந்திப்பு பஸ்நிலைய புதிய கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் ஆம்னி பஸ்களை நிறுத்தம் குறித்த பிரச்னை மீண்டும் தலையெடுத்தது. இதையடுத்து ஆம்னி பஸ்கள் வண்ணார்பேட்டை மேம்பாலம் இறக்கம் வடக்கு பைபாஸ் சாலை நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல மாநகராட்சி தற்காலிக அனுமதியளித்தது.

விரைவில் நிரந்தர பஸ் நிறுத்தம் அமைத்து தரப்படும் உறுதியளிக்கப்பட்டது. வண்ணார்பேட்டையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக கூறி போலீசார் உயர் அதிகாரி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் வண்ணார்பேட்டையில் நிறுத்திய ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்திடம் மீண்டும் ஆம்னி பஸ்கள் நிறுத்தம் கேட்டு உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து புதிய பஸ்நிலையம் எதிர்புறம் சிறைத்துறைக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை ஒப்பந்த அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. இதனை மாநகராட்சி சீர்படுத்தி நெல்லை மாநகராட்சி ஆம்னி பஸ் நிறுத்தம் என போர்டு வைத்தது. பயணிகளுக்காக தற்காலிக கழிவறை, குடிநீர் டேங்க் வசதியும் அமைத்தது. இந்நிலையில் அது தனியாருக்கு சொந்தமான இடம் என கூறி சிலர் ஆம்னி பஸ் நிலையத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர்.

போலீசார் தலையீட்டின் பேரில் இப்பிரச்னை முடிவுக்கு வந்தது. இதையடுத்து நெல்லை, குமரி, கேரளா பகுதியில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் தற்போது மாநகராட்சி ஆம்னி பஸ் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. ஆம்னி பஸ் நிலையத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் பஸ் நிலையம் முழுவதும் இரவை பகலாக்கும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்படுகிறது. பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும் பணிகளை விரைவுபடுத்தி உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : bus station ,corporation ,Omni ,Nellai , No Basic Facility, tirunelveli, omni bus stand
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்