ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேச தடை விதிக்கும் தெற்கு ரயில்வேயின் சுற்றறிக்கை: அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்..மொழிப்போர் உருவாகும் என எச்சரிக்கை!

சென்னை: ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேச தடை விதிக்கும் தெற்கு ரயில்வேயின் சுற்றறிக்கைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிர், எதிரே வந்து மோதும் சூழல் உருவானது. ஆனால் உரிய நேரத்தில் இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகள் உள்பட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மொழிப் பிரச்னையால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழில் இருப்பதை தவிர்க்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. மொழிப் பிரச்னையால் யாருக்கேனும் தகவல் புரியாமல் போவதை தவிர்க்க இந்தி அல்லது ஆங்கிலத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ள தெற்கு ரயில்வே ஆணை பிறப்பித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த உத்தரவுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

கே.பாலகிருஷ்ணன்

ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேச தடை விதிக்கும் தெற்கு ரயில்வேயின் சுற்றறிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ் மொழியை உதாசீனப்படுத்தினால் பல்வேறு தரப்பினரையும் திரட்டி போராட வேண்டிய நிலை வரும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெ.மணியரசன்

மத்திய அரசின் சட்டத்திற்கே எதிராக ரயில்வே துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது என்று பெ.மணியரசன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் தமிழில் தான் அலுவல் மொழி என்ற நிலையை ஏற்படுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மனுஷ்யபுத்திரன்

அரசுக்கும் மக்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தும் அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது என்றும், தெற்கு ரயில்வே தங்கள் சுற்றிக்கையை திரும்பப் பெற வேண்டும் எனவும் மனுஷ்யபுத்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். நிர்வாக இயந்திரத்துக்கும், மக்களுக்குமான தொடர்பை சீர்குலைப்பதாக ரயில்வேயின் சுற்றறிக்கை அறிவிப்பு உள்ளது. தமிழ் தெரியாத அதிகாரியால், பொதுமக்களின் புகாரை கூட புரிந்து நடவடிக்கை எடுக்க முடியாது என்று கருத்து.

ஜவாஹிருல்லா

ரயில்வே அலுவலர்கள் ஆங்கிலம், இந்தியில் உரையாட வேண்டும் என்ற சுற்றறிக்கை தமிழர் உரிமையை நசுக்கும் செயல் என்று ஜவாஹிருல்லா குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு பணிகளில் வடமாநிலத்தவர்கள் அமர்த்தப்படுவது அதிகரித்து வருகிறது என்றும், ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்று சொல்வது தமிழர்களை வஞ்சிக்கும் செயலாகவே கருதுகிறோம் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி

தெற்கு ரயில்வேயின் சுற்றிக்கையை தமிழக மக்களும், திமுகவும் அனுமதிக்காது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். ரயில்வே நிர்வாகம் உத்தரவை ரத்து செய்யவில்லை எனில் 1965ல் நடந்ததுபோல மீண்டும் ஒரு மொழிப்போர் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். மீண்டும் ஒரு மொழிப்போரை தூண்டும் செயல் என ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.


ராமதாஸ் அறிக்கை:

தெற்கு ரயில்வே துறை இந்திய மொழியை திணிக்க முயற்சிப்பதாக ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு ரயில்வேயில் வட இந்திய பணியாளர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் அதிகரித்துவிட்டது. தமிழ்நாட்டில் ரயில்வேயில் பணியாற்றும் வட இந்தியர்கள் தமிழ் கற்றுக்கொள்வதை கட்டாயமாக்க வேண்டும். ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்று உத்தரவிட்டு இருப்பது புதிய சிக்கலுக்கு வழி வகுக்கும். பயணச்சீட்டு வழங்கும் தமிழ் தெரியாத வட இந்திய ஊழியர்கள் தவறாக வேறு ஊர்களுக்கு பயணச்சீட்டு தருவது வாடிக்கையகிவிட்டது என்று கூறியுள்ளார்.Tags : Southern Railway ,leaders ,Railway , Railway officials, Tamil, Southern Railways, political leaders, condemned
× RELATED நினைவான விவசாயிகளின் கனவு..காவிரி...