ஊட்டி அருகே கலப்பட தேயிலை தூள் தயாரித்த தொழிற்சாலைக்கு சீல்

* 40 டன் பறிமுதல்

ஊட்டி :ஊட்டி அருகேயுள்ள சோலூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் கலப்பட தேயிலை தூள் உற்பத்தி செய்யப்படுவதாக குன்னூரில் உள்ள தேயிலை வாரியத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தேயிலை வாரிய செயல் இயக்குநர் பால்ராசு உத்தரவின் பேரில் தேயிலை வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தேயிலை தொழிற்சாலையில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதில் இரண்டு பேரல்களில் செயற்கை  சாயமும், சர்க்கரை தூள் சேர்த்து தேயிலையில் சாயம் கலப்பது  கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு சுமார் 8 டன் சாயம் கலந்த கலப்பட தேயிலைத் தூள் இருந்தது தெரியவந்தது. முன்னதாக தேயிலை தொழிற்சாலையில் சோதனை நடந்த ேபாது தொழிற்சாலையின் உரிமையாளர் திடீரென தலைமறைவானார்.  தொடர்ந்து உணவு மற்றும் பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களும் தேயிலை வாரிய அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.

 இதில் குன்னூரில் உள்ள தேயிலை சேமிப்பு கிடங்கில் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சுமார் 32 டன் சாயம் கலந்த தேயிலை தூள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கலப்பட தூள் தயாரித்த தேயிலை தொழிற்சாலைக்கு வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 40 டன் தேயிலை தூளை அழிக்க தேயிலை வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து தேயிலை வாரிய செயல் இயக்குநர் பால்ராசு கூறுகையில், ‘‘ஊட்டி அருகேயுள்ள சோலூர் பகுதியில் உள்ள எம்.ஜி., என்ற தனியார்  தொழிற்சாலையில் கலப்பட தேயிலை தூள் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சாயம் கலந்துள்ள சுமார்  40 டன் தேயிலை தூள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையின் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சீல் வைக்கப்பட்ட தொழிற்சாலை குன்னூர் அருகே  உள்ள ஒரு தொழிற்சாலையை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து அதன் பெயரில்  தேயிலையை ஏலத்தில் விற்க  தயாராக வைத்திருந்தும் விசாரணையில் தெரியவந்தது.  மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தேயிலை தூள்கள் பரிசோதனைக்காக அனுப்படுகிறது,’’ என்றார்.

Tags : ooty ,Tea Factory , sealed , officials
× RELATED மண் தரம் அறியாமல் கொடுத்த விதையால் 500 ஏக்கர் நிலக்கடலை சாகுபடி வீண்