×

கல்குவாரியிலிருந்து குடிநீர் பெற முடிவு : அரசு முதன்மை செயலாளர் தகவல்

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:சென்னை மாநகரின் கோடைக்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசால் மொத்தம் ₹233.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  நெய்வேலி நீர்ப்படுகையில் கூடுதலாக 9 புதிய ஆழ்துளை கிணறுகள் மூலம் 10  மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்படும். நெய்வேலி சுரங்கம்,  பரவனாறு ஆற்றில் இருந்து ₹6.67 கோடி மதிப்பீட்டில்  60 மில்லியன் லிட்டர் குடிநீர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   மேலும், சிக்கராயபுரம் கல்குவாரி மூலம் ₹11 கோடியில் பிப்ரவரி மாதம் முதல் 30 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  எருமையூர் கல்குவாரியிலிருந்து ரூ.19.17 கோடியில் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் பெற  நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது.  ரூ.53 கோடி மதிப்பீட்டில் ரெட்டேரி, பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஏரிகளிலிருந்து 30 மில்லியன் லிட்டர் நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இரட்டை ஏரியில் பணிகள்  முடிக்கப்பட்டு, சோதனை ஒட்டமாக கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் பெறப்படுகிறது.

இதர தேவைகளுக்கு கூடுதலாக 358 இந்தியா மார்க் 2 பம்புகள் மற்றும் 126 மின்மோட்டார் பொருத்திய ஆழ்துளை கிணறுகள் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதியதாக 1,190 எச்டிபிஇ தொட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. தற்போது 148  சிறிய லாரிகள் மூலம் குறுகிய தெருக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இன்னும் 10 தினங்களில் மேலும் 52 லாரிகளின் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வாரியத்தின் புதிய முயற்சியாக குறுகலான 64  தெருக்களில் உள்ள வீடுகளுக்கு அருகாமையிலேயே குடிநீர் வழங்க புதிய முறைகள் மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. நுகர்வோர் பதிவு செய்யும் நாளிலிருந்து அடுத்த இரண்டு நாட்கள் வரை தேவைப்படும் லாரி நடையை முன்கூட்டியே பதிவு செய்ய இயலும். நுகர்வோரின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு இச்சேவைக்காக  தற்சமயம் 2,000 லிட்டர் மற்றும்  3,000  லிட்டர் கொள்ளளவு கொண்ட 200 எண்ணிக்கையில்  சிறிய ரக லாரிகள் பயன்படுத்தபட உள்ளன. பருவமழை பொய்த்தாலும், சென்னை  மாநகர மக்களுக்கு நாளொன்றுக்கு 525 மில்லியன் லிட்டர் குடிநீர் தொடர்ந்து விநியோகம் செய்யப்படும்.

Tags : Galkuwari , Deciding , drinking water , Government Chief ,Secretary Information
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...