×

பக்தர்கள் புகார் எதிரொலி பிரசாதங்களை கூடுதல் விலைக்கு விற்றால் குத்தகை ரத்து

* செயல் அலுவலர்களுக்கு அதிகாரம் * கமிஷனர் பணீந்திர ரெட்டி அதிரடி

சென்னை: பக்தர்கள் புகார் எதிரொலியை தொடர்ந்து, பிரசாதங்களை கூடுதல் விலைக்கு விற்றால் குத்தகையை ரத்து செய்ய கமிஷனர் பணீந்திர ரெட்டி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பிரசாத கடைகள் ஏலம் விடப்படுகிறது. இந்த கடைகளை ஏலம் எடுப்பவர்கள் அறநிலையத்துறை குறிப்பிட்ட விலைக்கு பிரசாதம் விற்பதில்ைல. அதாவது, அறநிலையத்துறை ஏலம் விடும் போது குறிப்பிட்ட விலையில் பிரசாதம் விற்காமல் லாப நோக்கில் கூடுதல் விலைக்கு பிரசாதம் விற்கின்றனர். இதுதொடர்பாக அறநிலையத்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதன்பேரில் அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி சர்க்கரை பொங்கல் ரூ.10, புளியோதரை 150 கிராம் ரூ.10, லட்டு 50 கிராம் ரூ.10, மைசூர் பாகு 25 கிராம் ரூ.5, அதிரசம் 50 கிராம் ரூ.10, சொஜ்ஜி அப்பம் 50 கிராம் ரூ.10, கைமுறுக்கு 50 கிராம் ரூ.10, மிளகு வடை 25 கிராம் ரூ.5, தேன்குழல் 50 கிராம் ரூ.10 என்ற விலையில் தான் விற்பனை செய்ய வேணடும். இந்த விலையிலும், எடையிலும் தரத்திலும் மாற்றம் இருப்பது தெரிய வந்தால் குத்தகையை ரத்து செய்து, செலுத்திய தொகையை பறிமுதல் செய்ய  செயல் அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், எந்தெந்த பிரசாதங்களை நெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் தயாரிக்கிறார்கள் என்பதை விளம்பர பலகையில் விலை எடை விவரத்துடன் பக்தர்கள் பார்வைக்கு தெளிவாக தெரியும்படி எழுதி வைக்க வேண்டும். பிரசாதம் தயாரிப்பு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட இடத்தில், அனுமதிக்கப்பெற்ற நேரத்தில் வழக்கத்திற்கு இடையூறு ஏதுமின்றி தயாரிக்க வேண்டும். கோயில் பிரசாதம் தயாரித்து வேறு இடங்களுக்கு விற்பனைக்காக எடுத்து செல்லவோ அல்லது வெளியில் இருந்து கொண்டு வந்து விற்கவோ அனுமதிக்க கூடாது என்று கோயில் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Tags : devotees , Devotees complain,sold , extra price
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி